அரசுப் பள்ளி மாணவர்களே… குட் நியூஸ் இதோ!! உங்களின் உயர் கல்விக்கான முழுச் செலவையும் அரசே ஏற்குமாம்.!!

6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்றுள்ள மாணவர்கள் புகழ் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து இளங்கலை படிக்க, முழுச் செலவையும் அரசே ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள திறன்மிக்க மனிதவளத்தை மேலும் மேம்படுத்தி, ஓர் அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்குவது இந்த அரசின் தொலைநோக்குப் பார்வையாகும். உலகளாவியபங்களிப்புடன், ‘அறிவு சார் நகரம்’ (Knowledge City) ஒன்று உருவாக்கப்படும். இந்த அறிவு சார் நகரம், உலகளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் கிளைகளைக் கொண்டிருக்கும். இந்நகரம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், திறன் பயிற்சி மையங்கள், அறிவு சார்ந்த தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைத் தன்னகத்தேகொண்டிருக்கும்.

மேலும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO), தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (SIPCOT), தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (TANSIDCO) போன்ற அரசுபொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்கள் தங்களின் வளாகங்களில் ஆராய்ச்சிப் பூங்காக்களை நிறுவ ஊக்குவிக்கப்படும்.

தமிழ்நாட்டின் உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் உயர்ந்துகொண்டே வருகிறது. அதற்கேற்ப, அரசுக் கல்லூரிகள் மற்றும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய் செலவில் ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்கி, புதிய வகுப்பறைகள், விடுதிகள், ஆய்வகங்கள், திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கப்படும். இதற்காக, இவ்வாண்டு 250 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

முன்னுரிமை அடிப்படையில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் பல்வேறு கட்டணங்களுக்காக 204 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இம்மதிப்பீடுகளில் உயர்கல்வித் துறைக்கு 5,668.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ஐந்து இலட்சம் இளைஞர்களை, படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்துவதே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கனவுத் திட்டமான’நான் முதல்வன்’ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவ, மாணவியர்களின்தனித் திறமைகள்அடையாளம் காணப்பட்டு,அவை ஊக்குவிக்கப்படும். மேலும்,தொழில் நிறுவனங்களின் திறன் தேவைக்கேற்ப மாணவர்களுக்கு சிறப்புத் திறன்பயிற்சிகள் வழங்கப்படும். இதன் மூலம், மாணவர்களின் வேலை பெறும் திறன் (employability) பெருகும். இத்திட்டத்தைச் செயல்படுத்த, 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உலகமெங்கும் பல நாடுகளில் விஞ்ஞானிகளாக, பேராசிரியர்களாக, தொழில் நிபுணர்களாக தமிழர்கள் தங்களது துறையில் சாதனை புரிகிறார்கள். பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் ஆராய்ச்சித் திறனை உயர்த்துதல், மாணவர்களுக்கு வழிகாட்டுதல், வளர்ந்து வரும் துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளுதல், பாடத்திட்டத்தை மாற்றியமைத்தல் போன்றவற்றை இவர்களுடன் இணைந்து செயல்படுத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் கழகம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்நிறுவனங்களில் இளநிலைப் பட்டப்படிப்பு பயில்வதற்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கும். 6 ஆம் வகுப்பு முதல்12 ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்றுள்ள மாணவர்கள் இந்த உதவியைப் பெறலாம்”. இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.