பாரத் ஜோடோ நியாய யாத்திரை… பீகாருக்குள் நுழையும் ராகுல்காந்தி.!!

ணிப்பூர் மாநிலத்தில் இருந்து பாரத் ஜோடோ நியாய யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். பாஜகவிடம் இருந்து நாட்டு மக்களுக்கு நியாயம் கோரும் வகையில், ஜனவரி 14ஆம் தேதியன்று தொடங்கிய பாரத் ஜோடோ நியாய யாத்ரா நடைபயணமானது மார்ச் 20ஆம் தேதி மும்பையில் நிறைவடையவுள்ளது.

இந்த யாத்திரை நடைபயணமாகவும், பேருந்திலும் மேற்கொள்ளப்படுகிறது.

மணிப்பூரில் தொடங்கிய ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை, நாகாலாந்து, அசாம், ஆகிய மாநிலங்களை கடந்து மேற்குவங்க மாநிலத்துக்குள் கடந்த 25ஆம் தேதியன்று நுழைந்தது. இந்த நிலையில், ராகுலின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை பீகார் மாநிலத்துக்குள் இன்று நுழையவுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு நிறைந்ததும், இஸ்லாமிய மக்கள் தொகை அதிகம் உள்ள மாவட்டமான கிஷான்கஞ் வழியாக அம்மாநிலத்துக்குள் ராகுலின் யாத்திரை நுழையவுள்ளது.

பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ள இந்தியா கூட்டணியில் இருந்து, பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் விலகிய நிலையில் ராகுல் காந்தியின் யாத்திரை பீகார் மாநிலத்துக்குள் நுழையவுள்ளது. பீகார் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த நிதிஷ்குமார், பாஜக எம்எல்ஏக்களின் ஆதரவுடன் மீண்டும் முதல்வராகியுள்ளார். எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இந்தியா கூட்டணியுடனான சூழல் சரியில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.