விபத்துக்குள்ளான அரசு விமானம்: ₹ 85 கோடி அபராதம்-லைசென்சும் முடக்கம் – பைலட் ஆவேசம்.!!

போபால் : மத்திய பிரதேச அரசுக்கு சொந்தமான விமானத்தை தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாக்கியதாக விமானிக்கு 85 கோடி ரூபாய் அபராதம் விதித்து மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் விமானியின் லைசென்சும் முடக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச அரசு 2019 ஆம் ஆண்டு 65 கோடி ரூபாய் மதிப்புள்ள பீச்கிராப்ட் ஏர் கிங் என்ற 7 இருக்கைகள் கொண்ட விமானத்தை 65 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

கொரோனா காலகட்டத்தின் போது கொரோனா பரிசோதனை மாதிரிகள் மற்றும் மருந்துகளை எடுத்துச் செல்வதற்கு இந்த மத்திய பிரதேச மாநில அரசால் இந்த விமானம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் தேதி குவாலியரில் இந்த விமானம் விபத்துக்குள்ளானது. பீச்கிராப்ட் ஏர் கிங் 250 ஜிடி என்ற இந்த விமானத்தில் கொரோனா பரிசோதனை மாதிரிகளும் எழுபத்தி ஒரு ரெசிபி மருந்து பெட்டிகளை ஏற்றிக்கொண்டு அகமதாபாத்திலிருந்து குவாலியர் சென்றது. குவாலியர் விமான நிலைய ஓடுபாதையில் தரை இறங்கிய போது அந்த விமானம் விபத்துக்குள்ளானது.

விமான ஓடுபாதையில் ஏற்படுத்தப்பட்டிருந்த தடை குறித்து தனக்கு தெரிவிக்கவில்லை என விமானி கூறிய நிலையில், விமானத்தை இயக்கிய விமானி மஜீத் அக்தர், துணை விமானி ஷிவ் ஜெய்ஸ்வால், நைப் தாசில்தார் திலீப் திரிவேதி உட்பட 3 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். விமான விபத்து குறித்து இந்தியாவில் சிவில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளாரன , டிஜிசிஏ விசாரணை நடத்திய நிலையில் விமானி விமான ஓட்டுனர் உரிமத்தை ஓராண்டுக்கு நிறுத்தி வைத்துள்ளது.

மேலும் விபத்து குறித்து புலனாய்வுப் பிரிவினரும் விசாரித்துவரும் நிலையில், இதுகுறித்து மத்திய பிரதேச அரசு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் கவனக்குறைவாக விமானத்தை இயக்கிய விமானி மீது வழக்கு பதிவு செய்யப்படும் எனவும், 60 கோடி ரூபாய் மதிப்புள்ள விமானம் சேதமடைந்த நிலையில் அந்த தொகை மற்றும் மற்ற தனியார் நிறுவனங்களிடமிருந்து விமானங்களை வாடகைக்கு எடுப்பதற்கு ஆகிய 25 கோடியுடன் சேர்த்து 85 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விமானம் விபத்துக்குள்ளான போது விமானி அறையின் முன்புறம் , புரப்பல்லர் பிளேடுகள், ப்ரொப்பல்லர் ஹப் மற்றும் புதிதாக வாங்கிய இறக்கைகள் சேதமானதாகவும் அரசு கூறியுள்ளது.

இந்த நிலையில் விமான விபத்து ஏற்பட்டபோது ஓடுபாதையில் ஏற்படுத்தப்பட்டிருந்த தடை குறித்து தனக்கு தெரிவிக்கவில்லை எனவும், விமானத்தை காப்பீடு செய்யவில்லை என குற்றம் சாட்டியுள்ளார் விமானி அக்தர். மேலும் காப்பீடு செய்யப்படாத விமானத்தை பறப்பதற்கு அனுமதித்தது யார் என கேள்வி எழுப்பியுள்ளார். முறையான காப்பீடு மற்றும் விமானப் போக்குவரத்து நெறிமுறைகளை கடைபிடிக்க அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். விமானம் காப்பீடு நெறி முறைகளை பின்பற்றாமல் எப்படி பறக்க அனுமதிக்கப் பட்டது என்பது குறித்து மாநில அரசு இதுவரை தகவல் தெரிவிக்காத நிலையில் இந்த விவகாரம் தற்போது மத்திய பிரதேசத்தில் பரபரப்பைக் கூட்டியுள்ளது.