பிரதமர் மோடியின் உ.பி. பயணம் ரத்து..!

மோசமான வானிலை காரணமாக பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரப் பிரதேச பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஐந்து மாநிலத் தேர்தலில், உத்தரப் பிரதேச மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தோதல் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மாா்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதையொட்டி கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

பாஜக சார்பில், பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, அமித் ஷா ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப் பிரதேசத்தில் பிஜ்னூர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவதாக இருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிலாக, அவர் காணொலி மூலமாக அங்குள்ள மக்களிடையே உரையாற்றி வருகிறார். மேற்கு உத்தரப் பிரதேசத்தில் மேலும் இரு இடங்களில் இன்று நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.