பெங்களூர்: மெட்ரோ ரயில் சேவையை பெங்களூர் பொம்மசந்திரா முதல் தமிழகத்தின் ஓசூர் வரை 20.5 கிலோமீட்டர் தூரம் நீட்டிப்பு செய்ய கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் தமிழகம்-கர்நாடகம் இடையேயான போக்குவரத்தை பொதுமக்கள் வேகமாக மேற்கொள்ள முடியும்.
கர்நாடக தலைநகர் பெங்களூரில் மெட்ரோ ரயில் போக்குவரத்து நடைமுறையில் உள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் வேகமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மெட்ரோ ரயில் சேவைகள் தொடர்ந்து நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் பெங்களூர் மெட்ரோ ரயில் சேவையை தமிழ்நாடு வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
அதாவது பெங்களூர் பொம்மசந்திராவில் இருந்து தமிழ்நாட்டின் ஓசூர் வரை நீட்டிப்பு செய்தால் கர்நாடகம், தமிழக மக்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும் என வலியுறுத்தப்பட்டது. அதாவது தினமும் கர்நாடகம்-தமிழக எல்லையான ஓசூரில் இருந்து ஏராளமானவர்கள் பெங்களூரில் பணி நிமித்தமாக சென்று வருகின்றனர். அதேபோல் பெங்களூரில் இருந்து திரளானவர்கள் ஓசூர் வந்து செல்கின்றனர். இதனால் இந்த கோரிக்கை நீண்ட காலமாக வலுத்து வந்தது.
இத்திட்டம் தொடர்பாக கிருஷ்ணகிரி எம்பி செல்லக்குமாரும் தொடர்ந்து மத்திய மற்றும் கர்நாடக அரசிடம் வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் தான் பெங்களூர் மெட்ரோ ரயில் சேவையை பெங்களூரின் பொம்மசந்திரா முதல் தமிழ்நாட்டின் ஓசூர் வரை நீட்டிப்பு செய்ய கர்நாடக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டத்தில் கூடுதலாக 20.5 கிலோமீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டு ஓசூர் வரை நீட்டிப்பு செய்ய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஒப்புதல் வழங்கியுள்ளார்.இதில் 11.7 கிலோமீட்டர் தூரம் கர்நாடகத்திலும், மீதமுள்ள 8.8 கிலோமீட்டர் தொலைவு தமிழகத்தில் அமையும்.
இதுபற்றி கிருஷ்ணகிரி எம்பி ஏ செல்லகுமார் கூறியதாவது: ”மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஆய்வு நடத்த வேண்டும் என கர்நாடக அரசு கேட்டு கொண்டுள்ளது. . இதுதொடர்பாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்துக்கு மே 23ல் பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம் முன்மொழிவு ஒன்றை அனுப்பியுள்ளது. பொம்மசந்திரா-ஓசூர் வரையிலான வழித்தடமானது இருமாநிலங்களுக்கு இடையேயான மெட்ரோ ரயில் சேவை என்பதால் திட்ட செலவை பகிர்ந்து கொள்வதில் ஒருங்கிணைப்பு அவசியமாகும். ஓசூரில் உள்ள மக்களின் கனவுத் திட்டம் இது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் இரு மாநில மக்களும் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பயனடைவார்கள். இதுதொடர்பாக விரைவில் முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளேன். மேலும் விரிவான திட்ட அறிக்கையை வழங்ககோரி கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுத உள்ளேன்” என்றார்.
Leave a Reply