டிராஃபிக் போலீஸுக்கு மகிழ்ச்சி செய்தி…வெளியான முக்கிய அறிவிப்பு…

தமிழகத்தில் இரவு வேலை பார்க்கும் டிராபிக் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ-களுக்கு ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

மக்களின் நலன் சார்ந்து அயராது உழைக்கும் காவல் துறையினருக்கு பொதுவாகவே விடுமுறை நாட்கள் என்பது குறைவுதான். அத்துடன் அரசு விடுமுறை, பண்டிகை நாட்கள் என எதற்கும் விடுப்பு வழங்கப்படுவதில்லை. சொல்லப்போனால் இதுபோன்ற பண்டிகை நாட்களில் தான் கண்காணிப்பு, பாதுகாப்பு என கூடுதல் பணிச்சுமை இருக்கும். குடும்பத்தாருடனும் நேரம் செலவிட முடியாததால் காவலர்கள் பலரும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனால் காவல்துறையினருக்கு விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்பது பல நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

ஆகையால் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் தற்போது காவல் துறையினருக்கு சிறப்பு விடுமுறைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் போக்குவரத்துப் போலீசாருக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி இரவு வேலை பார்க்கும் டிராபிக் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் டிராபிக் எஸ்.ஐ-களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

அத்துடன் போக்குவரத்து உதவி கமிஷனர்களும் இரவு பணி பார்த்து பின் , மீண்டும் மறுநாள் மதியம் பணிக்கு வர வேண்டும் என்கிற நடைமுறை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு வேலை பார்த்தால் அவர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும் என்றும், ஓய்வுக்கு பின்னர் மறு நாள் பணிக்கு வந்தால் போதும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.