போலீசாருக்கு குட் நியூஸ்… எஸ்எஸ்ஐக்களுக்கு 15 நாளுக்கு ஒருமுறை விடுமுறை- தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

சென்னை: தமிழகத்தில் போலீசாருக்கு வார விடுமுறை வழங்கப்படுவதை போல் சப் இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை விடுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் உன்னத பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தீபாவளி, பொங்கல் உள்பட அனைத்து விழா காலங்களிலும் தொடர்ந்து பணியாற்றும் சூழல் உள்ளது.

மேலும் முக்கிய பிரச்சனைகள் ஏற்பட்டால் போலீசாருக்கு விடுப்பு என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்றாக மாறிவிடும். விடுப்பு இன்றி தொடர்ந்து பணியாற்றி வருவதால் போலீசார் மனஅழுத்தத்துக்கு உள்ளாவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

மேலும் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியாதது, தொடர்ந்து பணி செய்வது உள்ளிட்ட காரணங்கால் மனச்சோர்வு ஏற்பட்டு சிலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்துள்ளது. இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் பணியாற்றும் போலீசாரின் பணிச்சுமை மற்றும் மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் மாநில அரசு தொடர்ந்து சில திட்டங்களை அறிவித்து வருகிறது.

இந்நிலையில் தான் தமிழக சட்டசபையில் கடந்த மே மாதம் 10ம் தேதி காவல் துறை மானியக் கோரிக்கை நடந்தது. இந்த விவாதத்தின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். அப்போது, போலீசாருக்கு வார விடுமுறை அளிக்கும் நடைமுறை பின்பற்றப்படுவதை தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒரு முறை சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும் இதன் மூலம் 10 ஆயிரத்து 508 பேர் பயனடைவார்கள் என்றும் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு போலீஸ் துறையில் இருந்து வரவேற்பு கிடைத்தது. மேலும் டிஜிபி சைலேந்திரபாபு சார்பில் போலீசாருக்கு வார விடுமுறை முறையாக வழங்கப்பட்டு வருவதைப்போல அதே பலன்கள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, 15 நாட்களுக்கு ஒரு முறை சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்று அவர் பரிந்துரை செய்திருந்தார்.

இந்நிலையில் தான் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் கே பணீந்திர ரெட்டி அரசாணை வெளியிட்டுள்ளார். அதில், ”முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பின் படி போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு கொடுத்த, முன்மொழிவினை ஏற்றுக்கொண்டு, சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை விடுமுறை வழங்க ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இதற்கு தேவையான திருத்தங்கள் அளிப்பதற்கு, போலீஸ் நிலை ஆணை தனியாக வெளியிடப்படும்” என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.