போலி கடன் செயலிக்கு குட் பை… இதோ ரெடி ஒயிட் லிஸ்ட்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!

கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகாரப்பூர்வமற்ற மூன்றாம் தரப்பு செயலிகள் குவிந்து கிடக்கின்றன.

அந்தவகையில் போலி கடன் செயலிகளும் குவிந்து கிடக்கிறது. இதன் மூலம் பல மோசடி சம்பவங்கள் அரங்கேறுகின்றன. மக்கள் பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர். கடன் செயலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். போலி கடன் செயலியால் அண்மையில் ஒரு தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், இந்திய அரசு போலி கடன் செயலிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாக அறிவித்துள்ளது. இந்த சட்டவிரோத லோன் செயலிகள் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித கிரெடிட் ஸ்கோர் இல்லாமலும், கடன் வழங்குகிறது. பின்னர் அவர்களின் பணத்தை திரும்ப பெறுவதற்கு மோசமான
வழிகளைப் பயன்படுத்துகின்றன. அவர்களுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு, கூகுள் நிறுவனம் 2000 கடன் வழங்கும் செயலிகளை முடக்கியது. கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் போலி செயலிகள் அதிகரித்து வருவது குறித்து நிதி அமைச்சம் ஆலோசனை மேற்கொண்டது.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சட்ட விதிமுறைகள், நெறிமுறைகளுக்கு உள்பட்ட கடன் செயலிகள் குறித்து ஆராய்ந்து , அவை மட்டும் ‘ஒயிட் லிஸ்ட்’ என்று பட்டியல் தயாரித்து அதில் சேர்க்கும். ஒயிட் லிஸ்ட் பட்டியலில் உள்ள செயலிகள் மட்டும் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அனுமதிக்கப்படும். இதை ஐடி அமைச்சகம் உறுதி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், வங்கி பயன்பாடுகள் தொடர்புடைய துறை அதிகாரிகளிடம் இன்று (செப்டம்பர். 9)ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. போலி கடன் செயலிகள் அதிகரிப்பு மற்றும் அதன் சிக்கல்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் நிதித்துறை செயலாளர், பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர், நிதி சேவைகள் துறை செயலாளர், மின்னணு & தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள், ஆர்பிஐ துணை ஆளுநர், செயல் இயக்குனர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய சீதாராமன், ‘சட்டவிரோத கடன் செயலிகள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்தார். கடன்கள்/மைக்ரோ கிரெடிட்கள், குறிப்பாக குறைந்த வருமானம், எளிய மக்களை குறி வைத்து அதிக வட்டி மற்றும் மறைமுக கட்டணங்கள் வசூலிப்பது முறையற்ற விதிமுறைகளால் மக்கள் பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர். கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

அந்தவகையில், ஒயிட் லிஸ்ட் தயாரிக்கப்பட உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி சட்டப்பூர்வமான, முறையான விதிமுறைகள் உள்ள கடன் செயலிகளை தேர்வு செய்து ஒயிட் லிஸ்ட் செய்யும். அது மட்டுமே பிளே ஸ்டோரில் உள்ளதை ஐடி அமைச்சகம் உறுதி செய்யும்.