இந்து சமய பூஜைக்கு எதிராக பேசிய தி.மு.க., – எம்.பி., :பூரண கும்ப மரியாதையை ஏற்ற புகைப்படம் – சமூக வலைதளங்களில் வைரல்

இந்து சமய பூஜைக்கு எதிராக பேசிய தி.மு.க., – எம்.பி., :பூரண கும்ப மரியாதையை ஏற்ற புகைப்படம் – சமூக வலைதளங்களில் வைரல்

தர்மபுரி தி.மு.க., – எம்.பி., செந்தில்குமார், சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர். நடிகர் ரஜினிகாந்த் போக்குவரத்து அபராத தொகை செலுத்தவில்லை என தெரிவித்து, ரஜினி ரசிகர்களின் கண்டனங்களை பெற்றவர். அதுபோல, அவ்வப்போது, பா.ம.க.,வை சீண்டி அவர் பதிவிடும் சமூகவலைதள பதிவுகளுக்கு, பா.ம.க., தொண்டர்கள் வசை பாடுவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம், தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஆலாபுரம் ஏரி சீரமைப்பு திட்டப்பணி துவக்க விழாவை, ஹிந்து முறைப்படி நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ‘இமாம் எங்கே; பாதிரியார் எங்கே…’ என, அதிகாரிகளிடம் கேட்டு, ‘இது திராவிட மாடல் ஆட்சி’ என கூறினார். ஆனால், சில மாதங்களுக்கு முன், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தென்கரை, கோட்டை பகுதியில், ‘விடியலை நோக்கி’ பிரசாரத்துக்காக, தர்மபுரி தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி, முன்னாள் எம்.பி., தாமரைச்செல்வன் ஆகியோருடன், கல்யாண ராமர் கோவிலுள்ள நஞ்சுண்டேஸ்வர் கோவிலுக்கு செந்தில்குமார் சென்றார். அப்போது, ஹிந்து முறைப்படி, கோவிலில் பரிவட்டம் கட்டி, பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. அதை அவர் ஏற்றுக்கொண்ட புகைப்படம், சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, செந்தில்குமார் கூறியதாவது:

நேற்று முன்தினம் ஆலாபுரத்தில் நடந்த ஏரி சீரமைப்பு திட்ட துவக்க விழாவில், ஏன் அனைத்து மதத்தினரை கொண்டு பூஜை செய்யவில்லை என்று தான், அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினேன். அது அரசு விழா என்பதால், அவ்வாறு கேள்வி எழுப்பினேன். தென்கரை கோட்டையில் நான் கலந்து கொண்டது, அரசு விழா அல்ல. அதனால், கோவில் நிர்வாகிகள் கொடுத்த பரிவட்டம், கும்ப மரியாதையை ஏற்றுக் கொண்டேன். இவ்வாறு அவர் கூறி, சமாளித்தார்.