கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில், யுவராஜ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது..
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் என்ற பொறியியல் மாணவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆணவகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு, மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து 10 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதேபோல, வழக்கில் இருந்து ஐந்து பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கோகுல் ராஜின்தாய் மேல்முறையீடு செய்தார். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் முக்கிய சாட்சியான கோகுல்ராஜின் தோழியை நீதிமன்றத்துக்கு வரவழைத்து விசாரித்தனர்.
அப்போது அவர் பிறழ்சாட்சி அளித்ததாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்நிலையில், யுவராஜ் உள்ளிட்டோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை என வாதிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மிகவும் திட்டமிட்டு கோகுல்ராஜ் கொல்லப்பட்டதாக வாதிட்டார். இதனிடையே கோகுல்ராஜ் கடைசியாக உயிருடன் காணப்பட்ட திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் மற்றும் கோகுல்ராஜ் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ரயில்பாதை ஆகியவற்றை நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
Leave a Reply