பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்- 1.50 லட்சம் மாணவர்கள் பங்கேற்க வாய்ப்பு.!

சென்னை: தமிழ்நாட்டில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்க உள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடப்பு ஆண்டில் பொறியியல் படிக்க விண்ணப்பித்த 1.5 லட்சத்திற்கு அதிகமான மாணவர்களுக்கு 4 சுற்றுகளாக கலந்தாய்வை நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகிய சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும், அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் இடம் பிடித்தவர்களுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு, கடந்த ஏப்ரல் 20ம் தேதி தொடங்கி வரும் 23ம் தேதி வரை நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆக.25 தொடங்கி அக்.21ம் தேதி வரை நடைபெற இருந்தது. ஆனால் நீட் தேர்வு முடிவுகள் வராததால் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து செப்.7ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், செப்.10ம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த செப்.7ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி நடைபெற உள்ளது. பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு 4 கட்டங்களாக நடைபெற உள்ளது.

அதன்படி, முதல்கட்ட கலந்தாய்வு செப். 10 முதல் 12ம் தேதி வரையும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப். 25 முதல் 27ம் தேதி வரையும், மூன்றாம் கட்ட கலந்தாய்வு அக்.13 முதல் அக்.15 வரையிலும், நான்காம் கட்ட கலந்தாய்வு அக்.29 முதல் அக்.31 வரையிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு முதன்முறையாக கலந்தாய்வில் இடங்களைத்தேர்வு செய்யும் மாணவர்கள் 7 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்தி கல்லூரியில் சேர்ந்துவிட வேண்டும்.

மாணவர்கள் ஏற்கெனவே தேர்வு செய்த கல்லூரியில் படிப்பதற்கு விருப்பம் தெரிவித்தாலும், வேறு கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைத்தால் அதில் சேர விரும்புகிறேன் எனத் தெரிவித்தாலும், அதற்கான கட்டணத்தை தமிழ்நாடு பொறியியல் மாணவர் உதவி மையத்தில் செலுத்த வேண்டும். மாணவர்கள் சேர்க்கையின் போது செலுத்த வேண்டிய கட்டண விவரங்களும் ஒதுக்கீட்டு ஆணையில் தெரிவிக்கப்படும்.