சென்னை: அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பாடத்திட்டம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று அனைத்து துணைவேந்தர்களுக்கும் ஏற்கெனவே அறிவுரை வழங்கப்பட்டது. அதற்கேற்ப, மாநில உயர் கல்வி கவுன்சில் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை உருவாக்கி அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பியுள்ளது.
இந்த பாடத்திட்டத்தை முழுமையாகப் பின்பற்றுமாறு துணைவேந்தர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தற்போது பல்கலைக்கழகங்களில் தேர்வு முடிவுகள் வெவ்வேறு நாட்களில் வெளியிடப்படுகின்றன. இதனால் ஒரு பல்கலைக்கழக மாணவர்கள் இன்னொரு பல்கலைக்கழகத்தில் சேருவதில் பிரச்சினை ஏற்படுகிறது.
இதைக் கருத்தில்கொண்டு, எப்படி 10-ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஒரே நாளில் வெளியிடப்படுகிறதோ அதேபோல், இனிவரும் காலங்களில் அனைத்து பல்கலைக் கழகங்களிலும் பட்டப் படிப்பு தேர்வு முடிவை ஒரேநாளில் வெளியிட முடிவெடுக்கப்பட்டுள் ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.