இனி ‘டெட்ரா பேக்’ மூலம் மது விற்பனை- அமைச்சர் தகவல்..!

பவானி: ஈரோடு மாவட்டம், பவானியில் அமைச்சர் முத்துசாமி நேற்று அளித்த பேட்டி: தமிழக டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை ‘டெட்ரா பேக்’கில் விற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கர்நாடகா, பாண்டிச்சேரியில் ‘டெட்ரா பேக்’ மூலமும், ஆந்திராவில் பிளாஸ்டிக் பாட்டில்களிலும் மது விற்பனை நடைபெறுவதை அதிகாரிகள் குழு ஆய்வு செய்து வருகிறது.

இதுதொடர்பாக, தொழிற்சங்க பிரதிநிதிகள், மதுபான உற்பத்தியாளர்கள், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட தனி குழுவின் ஆய்வு அறிக்கையின்படி ‘டெட்ரா பேக்’ அமல்படுத்தப்படும். மதுபாட்டில்களை விளை நிலங்கள், ரோடுகளில் போடுவதால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனை தவிர்க்கவும், கலப்படத்தை தவிர்க்கவும் ‘டெட்ரா பேக்’ உதவும் என்றார்.