தலைநகரில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு

டெல்லியில் 3 நாள் பிரிக்ஸ் உச்சி மாநாடு பாரத் மண்டபத்தில் இன்று தொடங்குகிறது. இதற்காக டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா இணைந்து உருவாக்கப்பட்ட பிரிக்ஸ் அமைப்பு 2024ல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுடனும், 2025ல் இந்தோனேசியாவுடனும் மொத்தம் 11 நாடுகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்த ஆண்டு இந்தியா ஏற்றுள்ளது.

இந்நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லி பாரத் மண்டபத்தில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்க உள்ளது. இம்மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியன், தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ரமபோசா, இந்தோனேசியா அதிபர் சுபியாந்தோ உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டிற்காக டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாடு நடக்கும் பாரத் மண்டபத்தை சுற்றி 5 கிமீ தொலைவுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. 7,000 பாதுகாப்பு படையினர், 4,800 போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உலக தலைவர்கள் தங்கும் ஓட்டல்கள் அனைத்தும் போலீசாரின் முழு கண்காணிப்பு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. டெல்லி முழுவதும் பல இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், இன்று அரசு மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வார விடுமுறை முடிந்து திங்கட்கிழமை தான் திறக்கப்படும்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் புடின் இன்று டெல்லி வருகிறார். அவர் இன்று பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதே போல, சீன அதிபர் ஜி ஜின்பிங் மாநாட்டில் பங்கேற்க உள்ளார். அவரது வருகையை சீனா நேற்று மதியம் உறுதி செய்தது. இப்பயணத்தின் போது ஜின்பிங் – பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மாநாட்டின் நிறைவு நாளான நாளை மறுதினம் அவர் பிரதமர் மோடியை சந்திப்பார் என கூறப்படுகிறது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் ஜின்பிங் இந்தியா வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறுகையில், ”கடந்த 2 அல்லது 3 பிரிக்ஸ் உச்சிமாநாடுகளால் உறுதியான பலன்களோ அல்லது குறிப்பிடத்தக்க முடிவுகளோ கிடைத்ததாக நான் கருதவில்லை. உண்மையில், நாம் பிரிக்ஸ், எஸ்சிஓ, ஜி20 மற்றும் குவாட் ஆகிய அமைப்புகளில் உறுப்பினராக இருகிறோம். இவற்றால் நமக்கு என்ன பலன் கிடைக்கிறது? என்னால் அதைக் காண முடியவில்லை. ஆனால் முன்பு பிரிக்ஸ் உச்சிமாநாடுகள் சில உறுதியான பலன்களைத் தந்தன” என்றார். இதற்கு பாஜ தரப்பில் பலர் பதிலடி கொடுத்துள்ளனர். பாஜ மூத்த தலைவர் ராம் மாதவ் கூறுகையில், ”இவர்களைத்தான் பிரதமர் மோடி அதிருப்தி மாமாக்கள் என அழைக்கிறார். பிரிக்ஸ் போன்ற சர்வதேச அமைப்புகளுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்று நிராகரிப்பது, தற்போதைய உலக யதார்த்தத்தைப் பற்றிய முழுமையான புரிதல் இல்லாமையைக் காட்டுகிறது. வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றிய ஒருவரிடமிருந்து இத்தகைய கருத்து வருவது ஆச்சரியமளிக்கிறது” என்றார்.

கடந்த 2020ம் ஆண்டு கல்வான் எல்லையில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் பலியாகினர். சீன தரப்பில் பலியான வீரர்கள் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக கூறப்படவில்லை. இதைத் தொடர்ந்து மோசமடைந்த இருதரப்பு உறவு, பின்னர் பேச்சுவார்த்தை மூலம் சரி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிரதமர் மோடி சீனா சென்றார். 2020க்குப் பிறகு சீன முதலீடுகளுக்கு விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகளை இந்தியா விலக்கிக் கொண்டுள்ளது. எனவே, பிரிக்ஸ் மாநாட்டிற்காக சீன அதிபர் ஜின்பிங் இந்தியா வருவது மிக முக்கியமாக கவனிக்கப்படுகிறது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஜின்பிங் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணமாக இது இருக்கும். கடைசியாக அவர் 2019ல் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பை நடத்தியது குறிப்பிடத்தக்கது.