கோவை வியாபாரியிடம் 4 டன் புளி வாங்கி மோசடி- 2 பேர் கைது.!!

கோவை : திண்டுக்கல் மாவட்டம் நத்தம், சிறு குடியைச் சேர்ந்தவர் மகாராஜன் ( வயது 40) இவர் மாங்காய், புளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரை கடந்த மார்ச் மாதம் கோவையை சேர்ந்த கோபி கருப்பசாமி ( வயது 32) விருதுநகரை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 42) ஆகியோர் செல்போனில் தொடர்பு கொண்டு கோவை சாய்பாபா காலனி உள்ள தங்களது நிறுவனத்திற்கு 4 டன் புளி அனுப்பி வைக்குமாறு கேட்டனர். அதை நம்பிய மகராஜன் ரூ. 3 லட்சத்து 92 ஆயிரத்து 850 மதிப்பிலான 4 டன் புளியை அவர்கள் சொன்ன முகவரிக்கு அனுப்பி வைத்தார். உடனே கோபி ரூ.3 லட்சத்து 92 ஆயிரத்து 850 க்கு காசோலை கொடுத்து அனுப்பினார். இதையடுத்து ,கோபி மீண்டும் மகராஜனை அழைத்து அவசரமாக 3 டன் புளியை அனுப்புமாறு கூறினார் . உடனே மகாராஜா 3 டன் புளியை வாகனத்தில் கொண்டு வந்து கோவை ராமநாதபுரம் பகுதியில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த கோபி உள்ளிட்ட 3 பேரிடம் மகராஜன் புளிக்கு பணம் கேட்டு உள்ளார் .உடனே அவர்கள் 3 பேரும் பணத்துடன் வருவதாக கூறிவிட்டுச் சென்றனர் . ஆனால்  மீண்டும் வரவில்லை . அவர்களது செல்போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த மகராஜன் முதலில் வழங்கிய காசோலையை வங்கியில் செலுத்தினார் . அதில் பணம் இல்லாமல் திரும்பியது .இதனால் அதிர்ச்சி அடைந்த மகாராஜன் சாய்பாபா காலனி போலிசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ 4 லட்சம் மோசடி செய்ததாக விருதுநகரை சேர்ந்த கிருஷ்ணன்,கோவை செல்வபுரம் தெலுங்குபாளையத்தைச் சேர்ந்த கருப்பசாமி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.. இந்த வழக்கில் தொடர்புடைய கோபியை தேடி வருகிறார்கள்.