அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் வீட்டில் FBI அதிகாரிகள் திடீர் ரெய்டு- பரபரப்பு தகவல்..!

வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் முதல்வர் டிரம்பின் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு உள்ளதாகப் பரபர தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர் டிரம்ப். இவர் கடந்த 2016- 2020 வரை அமெரிக்காவின் அதிபராக இருந்தவர்.

கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ அதிபரிடம் படுதோல்வி அடைந்தார். அமெரிக்க அதிபர் ஒருவர் தேர்தலில் தோல்வி அடைவது கடந்த 30 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும்.

அடுத்து 2024ஆம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் நிச்சயம் களமிறங்கப்போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தச் சூழலில் எஃப்.பி.ஐ அதிகாரிகள் முன்னாள் அதிபர் டிரம்ப்பின் ஃபுளோரிடா வீட்டில் ரெய்டு செய்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதிபரின் அதிகாரப்பூர்வ ரெக்கார்டுகளை தனது புளோரிடா ரிசார்ட்டுக்கு மாற்றியது குறித்த வழக்கு தொடர்பாக இந்த ரெய்டு நடந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

முன்னாள் அமெரிக்க அதிபரான டிரம்ப் வீட்டில் எவ்வித முன்னறிவிப்பும் நோட்டீசும் இல்லாமல் எஃப்பிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி உள்ளனர். ஏற்கனவே டிரம்புக்கு எதிராக பல்வேறு வழக்குகள் விசாரணையில் உள்ள நிலையில், இந்த வழக்கு இப்போது முக்கியமான கட்டத்தை எட்டி உள்ளது. இந்த ரெய்டு தொடர்பாகக் கருத்து தெரிவிக்க அந்நாட்டின் நீதித்துறை மறுத்துவிட்டது.

இருப்பினும், அதிபர் மாளிகையில் இருந்து டிரம்ப் எடுத்து வந்த ஆவணங்கள் தொடர்பாகவே இந்த சோதனை நடைபெறுவதாகக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் இது தொடர்பாக டிரம்ப் தரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மிக அதிகப்படியான எஃப்.பி.ஐ அதிகாரிகள் தனது வீட்டில் ரெய்டு நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். எஃப்.பி.ஐ தரப்பிலும் இந்த ரெய்டு தொடர்பாக இப்போது எதுவும் கூற முடியாது என்று கூறிவிட்டனர்.

ட்ரம்ப் எஸ்டேட்டை எஃப்பிஐ அதிகாரிகள் முற்றுகையிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ட்ரம்ப், ட்ரம்ப் எஸ்டேட்டை சோதனை என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக விமர்சித்துள்ளார். அதேநேரம் எதற்காக இந்த ரெய்டு என்று அவர் விளக்கவில்லை. விசாரணை நிறுவனங்களுக்கு நான் முறையாக ஒத்துழைப்பு அளித்து வரும் நிலையில், எனது வீட்டில் இந்த அறிவிக்கப்படாத சோதனை அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்தச் சம்பவம் நாட்டின் இருண்ட காலத்தையே குறிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஃபுளோரிடா வீட்டில் அதிகாரிகள் சோதனைக்கு வந்த போது, டிரம்ப் அங்கு இல்லை என்று கூறப்படுகிறது. டிரம்ப் அடுத்த மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட பிளான் போடும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அவர் அதிபராக இருந்த காலத்தில் பல்வேறு மோசடிகளைச் செய்ததாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இருப்பினும், இதை அவர் தொடர்ந்து மறுத்தே வருவது குறிப்பிடத்தக்கது.