ஈரோடு: பெருந்துறை பகுதியில் பொதுமக்களிடையே பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை மிகக் கடுமையாகத் தாக்கி பேசினார்.
அதிமுகவில் உட்கட்சி விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஓ. பன்னீர்செல்வம் ஒருபுறம் தனது ஆதரவாளர்கள் உடன் தனியாகக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.
மறுபுறம் எடப்பாடி பழனிசாமி, அதையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் பொதுக்குழுவின் முடிவின்படி நான் தான் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற தேம்புடன் இருக்கிறார்.
அவர் இப்போது கட்சியை வலுப்படுத்துவதற்காகத் தமிழகம் முழுக்க பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சமீபத்தில் தான் பழனி சென்று முருகனைத் தரிசித்தார். விரைவில் தென் மாவட்டங்களுக்கும் சுற்றுலா செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். இந்தச் சூழலில் சமீபத்தில் திருப்பூர், காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் சென்ற எடப்பாடி பழனிசாமி அங்குக் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்தார்.
அதைத் தொடர்ந்து பெருந்துறை சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு பழைய பேருந்து நிலையம் அருகே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்குக் கூடி இருந்த பொதுமக்களிடையே பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஆன்லைன் ரம்மி காரணமாகத் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. தமிழக அரசு இதில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது.
அதிமுக ஆட்சியில் நாங்கள் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தைத் தடை செய்யும் சட்டத்தைக் கொண்டு வந்தோம். திமுக ஆட்சி அமைத்த உடனேயே ஆன்லைன் சூதாட்டத்தை நடத்துபவர்கள் திமுகவுடன் கைகோர்த்து உள்ளனர். இத்தனை மாதங்கள் கடந்து இப்போது ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக கருத்து கேட்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இது வேடிக்கையாக உள்ளது. இந்த விவகாரத்தில் திமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது.
அதிமுக அரசு சட்டமன்றத்திலேயே ஆன்லைன் ரம்மி சூதாட்டத்துக்கு எதிரான தடை சட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால், நீதிமன்றத்தில் சரியான ஆதாரங்கள் இல்லை என்று கூறிவிட்டார்கள். திமுக அரசு தான் சரியான ஆதாரங்களைக் காட்டவில்லை. ஆட்சிக்கு வந்த உடன் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் உடன் திமுக கைகோர்த்து உள்ளனது. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் மட்டும் ஆண்டுக்கு ரூ.20,000 கோடி வருவாய் கிடைக்கிறது.
கருத்துக் கேட்பது என மக்களை ஏமாற்றாமல் உடனடியாக ஆன்லைன் ரம்மிக்கு எதிரான தடை சட்டத்தை திமுக கொண்டு வர வேண்டும். அதிமுக ஆட்சியில் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்களின் நலன் மற்றும் கல்வியில் தனிக் கவனம் செலுத்தப்பட்டது. இப்போது திமுக ஆட்சியில் அதுவும் இல்லை. மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்தவுடன் தாழ்த்தப்பட்ட, அருந்ததியர் மக்களின் கல்வி உள்ளிட்ட அனைத்திலும் தனிக் கவனம் செலுத்தப்படும்” என்றார்.