ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மரணம் இந்தியாவுக்கு அதிர்ச்சியைத் தாண்டிய பெரும் இழப்பு…

ஜப்பான் நாட்டின் முன்னால் பிரதமராக இருந்த ஷின் சோ அபே நேற்று காலை நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிக்கொண்டு இருந்த போது துப்பாக்கியால் ஒருவர் சுட்டார்.

இதில் உடனே நிலைகுலைந்து போன ஷின் சோ அபே மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பின்னர் மரணம் அடைந்தார். இந்தச் செய்தி உலக நாடுகளுக்கு அதிர்ச்சி அளித்த நிலையில் இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் கூடுதலான பாதிப்பை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும்.

67 வயதாகும் ஷின் சோ அபே, மருத்துவரின் அறிவுறுத்தல் படி கடந்த 2020ஆம் ஆண்டுப் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து இருந்தார். ஆனால் அரசியலில் இருந்து முழுமையாக வெளியேறவில்லை,நேற்று  Tetsuyo Yamagami என்பவரால் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தியாவின் பல முக்கிய வளர்ச்சி திட்டத்தில் ஷின்சோ அபே அதிகளவிலான பங்கு உண்டு.

2006-07 மற்றும் 2012-20 வரை என ஒன்பது ஆண்டுகள் ஜப்பானின் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் ஷின்சோ அபே. பிரதமராக அவர் பதவியேற்றது இந்தியாவுடன் பல துறைகளில் ஒத்துழைப்பை அதிகரித்ததன் மூலம் அபே மிகவும் முக்கியமானவராகப் பார்க்கப்படுகிறார்.

நரேந்திர மோடி 2014ல் நாட்டின் பிரதமராகப் பதவியேற்றிய 2 மாதத்தில் ஜப்பான் நாட்டிற்குச் சென்றார், இந்தப் பயணத்தில் இந்தியா – ஜப்பான் மத்தியில் இருந்த சாதாரண இருதரப்பு உறவு, சிறப்பு மூலோபாய மற்றும் உலகளாவிய கூட்டாண்மை உறவாக மாறியது.

இரு நாடுகளும் 2016 ஆம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, இது ஜப்பானிய நிறுவனங்களுக்குச் சொந்தமான அல்லது பங்குகளை வைத்திருந்த அமெரிக்க மற்றும் பிரெஞ்சு அணுசக்தி நிறுவனங்களுடனான இந்தியாவின் ஒப்பந்தங்களுக்கு முக்கியமாக மாறியது.

NPT அல்லாத உறுப்பினருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஜப்பானுக்குள் இருந்த எதிர்ப்பை அபே புறக்கணித்ததால் இந்தியாவிற்குப் பெரும் வெற்றி வாயப்பாக மாறியது.

இந்தியாவும் ஜப்பானும் தங்கள் கடற்படைகள் இரு நாடுகளின் துறைமுகங்களைப் பயன்படுத்த அனுமதி அளிக்கும் முக்கியமான ஒப்பந்தத்தையும் கையெழுத்திட்டது. இரு நாடுகளும், ஆஸ்திரேலியாவுடன் இணைந்து, இந்தோ-பசிபிக் பகுதியில் விநியோகச் சங்கிலியை விரிவாக்கம் செய்து இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் கடல் போக்குவரத்தை மேம்படுத்தியது.

பொருளாதார அடைப்பிடையில் பார்த்தால் ஷின்சோ அபே ஆட்சிக்காலத்தில் அதாவது 2018-19 ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களில் ஜப்பான் 522.4 பில்லியன் யென் (4.9 பில்லியன் டாலர்) செலவிட்டது.

இந்த முதலீட்டில் தான் மும்பை மற்றும் அகமதாபாத் இடையேயான அதிவேக ரயில் திட்டம், டெல்லி – மும்பை மற்றும் சென்னை – பெங்களூரு இடையே தொழில்துறை தாழ்வாரங்கள் உருவாக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தில் 80 சதவீத பணத்தை ஜப்பான் 0.1 சதவீத வட்டி விகிதத்தில் சுமார் ரூ.79,000 கோடி மென்மையான கடனாக வழங்கியது. இந்தக் கடனை 50 ஆண்டுகளில் செலுத்த வேண்டும் இதேபோல் 15 ஆண்டுகள் மோரோடோரியம் காலத்தையும் வழங்கியுள்ளது.

ஏப்ரல் 2000 மற்றும் மார்ச் 2022ல் காலகட்டத்தில் 36 பில்லியன் டாலர் அன்னிய முதலீட்டு உடன் இந்தியாவில் ஐந்தாவது பெரிய முதலீட்டாளராக ஜப்பான் உள்ளது. இந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த FDI வரவுக்கு 6.28 சதவிகிதம் பங்களித்துள்ளது ஜப்பான்.

இதுமட்டும் அல்லாமல் இனி வரும் காலத்தில் ஜப்பான் இந்தியாவில் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்வது மட்டும் அல்லாமல் பல முக்கியமான முதலீட்டு திட்டங்களையும் செயல்படுத்த உள்ளது. இந்தியா – ஜப்பான் இடையேயான நடப்புறவு ஏற்கனவே சிறப்பாக இருந்தாலும் ஷின்சோ அபே ஆட்சி காலத்தில் மிகவும் சிறப்பாக இருந்தது.

ஷின்சோ அபே-வின் மரணம் இந்தியாவுக்கு அதிர்ச்சியைத் தாண்டி பெரும் இழப்பு என்றால் மிகையில்லை.