கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான தனிப்படை விசாரணைக்கு நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் ஆஜர்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான தனிப்படை விசாரணைக்கு நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் ஆஜர்

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கி ஓய்வு எடுக்கும் கோடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு காவலாளி கொள்ளப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய கனகராஜ், சயான், ஜெம்சீர் அலி, மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் மர்மமான முறையில் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து கோவை மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகரின் மேற்பார்வையின் கீழ் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக அ.தி.மு.க வை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, ஜெயலலிதா கார் ஓட்டுநர் குணசேகரன் மற்றும் தொழிலதிபர் செந்தில் குமார் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை உதகை நீதிமன்றத்திற்கு வந்தபோது, கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் இதுவரை 267 சாட்சிகளிடம் விசாரணை முடிந்துள்ளது. அடுத்த கட்டமாக காவல்துறை மற்றும் தடயவியல் துறையை விசாரணை செய்ய போவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே அ.தி.மு.க நிர்வாகிகள் சிலருக்கும் தனிப்படை போலீசார் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அந்த வகையில், நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியரான மருது அழகுராஜிற்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று கோவையில் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளிக்கவுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரிக்கும் தனிப்படையின் அழைப்பாணையை ஏற்று, இன்று காலை கோவையில் விசாரணைக்கு ஆஜராகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இவர் அண்மையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ்-க்கு ஆதரவாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.