ஆனைமலை காப்பகத்தில் புலிக்குட்டியின் சேதமடைந்த பல்லுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க வனத்துறை முடிவு..!

கோவை மாவட்டம் வால்பாறை முடீஸ் பஜார் குடியிருப்பு பகுதியில் கடந்த ஆண்டு பிறந்த 8 மாதமே ஆன புலிக்குட்டி ஒன்று காயங்களுடன் மீட்கப்பட்டது. வழக்கமாக புலிக்குட்டிகள் தாயுடன் இருக்கும் போது வேட்டையாட கற்றுக்கொள்ளும். ஆனால் இந்த புலிக்குட்டி 8 மாதமாக இருக்கும்போதே வனத்துறை பராமரிப்பிற்கு வந்துவிட்டதால் வேட்டையாட தெரியாமல் சிரமப்பட்டது. எனவே புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி அளிக்கும் விதமாக ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மானாம்பள்ளி அருகே மந்திரிமடம் என்ற இடத்தில் 10,000 சதுர அடி பரப்பளவில் ரூ.75 லட்ச ரூபாய் செலவில் கம்பி வேலி கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. அதில் புலிக்குட்டியை அடைத்து வைத்து வேட்டையாடுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
அதன்பலனாக கூண்டுக்குள் விடப்பட்ட முயல்களை, அந்த புலி வேட்டையாடி சாப்பிட்டது. பிடிபட்டபோது 80 கிலோவாக இருந்த புலிக்குட்டி தற்போது 150 கிலோவை தாண்டியுள்ளது. புலி மீட்கப்படும்போது அதன் பல் ஒன்று சேதம் அடைந்து இருந்தது. வேட்டையாடுவதற்கு அந்த பல் தான் முக்கியமானதாகும். சேதம் அடைந்த பல்லில் தற்போது மேலும் கீறல் ஏற்பட்டுள்ளது. தற்போது கோழி, முயல் போன்ற சிறிய உயிரினங்களையே புலி வேட்டையாடுகிறது. எதிர்காலத்தில் மான், பன்றி போன்ற பெரிய விலங்குகளை புலி வேட்டையாட வேண்டுமென்றால் சேதம் அடைந்த அந்த பல்லுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்டர்கள் கருதினர். எனவே சேதம் அடைந்த புலியின் பல்லுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. புலிக்கு சிகிச்சை அளிக்க மயக்க ஊசி செலுத்த வேண்டும். மயக்க ஊசி செலுத்த வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். இதற்காக வனத்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. அனுமதி கிடைத்ததும் மயக்க ஊசி செலுத்தி புலியின் சேதம் அடைந்த பல் சரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.