நுபுர் சர்மா விவகாரம்: கடும் நெருக்கடியில் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல பிரதமர் மோடி திட்டமா..?

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் ஜூன் 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ஜெர்மனியின் ஸ்க்லோஸ் எல்மாவில் ஜி7 நாடுகளின் மாநாடு நடைபெறுகிறது.

இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். ஜெர்மன் பயணத்துடன் பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் செல்வார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியா, ஐக்கிய அரபு அமீரக நாடுகள் சர்வதேச அரங்கில் நல்லுறவை பேணி வருவதுடன் பல ஆண்டுகளாக வர்த்தக தொடர்பை வைத்து இருக்கின்றன. அமெரிக்காவுக்கு பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தின் 2 வது மிகப்பெரிய வர்த்தக பங்குதாரர் இந்தியாதான். 34 லட்சம் இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இதன் காரணமாக குறிப்பிட்ட இடைவெளியில் இரு நாட்டு தலைவர்களும் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகம் செல்வது வழக்கம்.

ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாட்டு பயணங்களை தவிர்த்ததால் சுமார் 3 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்லவில்லை. கடைசியாக அவர் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான, ‘Order of Zayed’ என்ற விருதை வாங்கச் சென்றார். அத்துடன் இந்தியாவின் ரூபே கார்ட் மற்றும் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை ஒட்டி தபால் தலைகளை அவர் அமீரகத்தில் வெளியிட்டார்.

அதற்கு முன்பாக 2018 ஆம் ஆண்டிலும் 2015 ஆம் ஆண்டிலும் பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றிருக்கிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் துபாய் எக்ஸ்போ கண்காட்சியில் இடம்பெற்றிருந்த இந்திய அரங்கத்தை பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. FTA எனப்படும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையெழுத்திட்டு இருப்பதால் இந்த ஆண்டு இருநாடுகளுக்கும் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.

இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலிபா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க உள்ளார். அதுமட்டுமின்றி நபிகள் நாயகம் குறித்து ஆளும் பாஜகவை சேர்ந்த நுபுர் ஷர்மாவும் நவீன் ஜிண்டாலும் அவதூறாக பேசியதற்கு ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார், ஈரான், குவைத் உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன. ஐக்கிய அரபு அமீரகமும் இந்திய தூதரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் அமீரக பயணமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.