தமிழகத்தில் முதன் முறையாக முதல்வரின் காப்பீடு திட்டம் மூலம் இளைஞருக்கு செயற்கை கை, கால்கள் பொருத்தி கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை..!

கோவை, அன்னூர் பகுதி, குமரன் குன்று, வேப்பம்பள்ளம் பகுதியை சேர்ந்த சுபாஷ்(22) என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் எதிர்பாராமல் நடந்த மின்சார விபத்தால் இரண்டு கால்களை முழங்காலுக்கு கீழும், இரண்டு கைகளை முழங்கைகளுக்கு கீழும் இழந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் உதவி வேண்டி கோரிக்கை மனு அளித்திருந்தார். அந்த மனுவை உடனடியாக பரிசீலனை செய்த மாவட்ட ஆட்சியர் தேவையான அரசு மற்றும் மருத்துவ உதவிகளை சம்மந்தப்பட்ட துறை விரைந்து வழங்க உத்தரவிட்டார். இந்நிலையில் கோவை மாவட்ட மறுவாழ்வு அலுவலர் வசந்த் குமார் மற்றும் கோவை மருத்துவக் கல்லூரி முதல்வர் நிர்மலா முதற்கட்டமாக அவருக்கு செயற்கை கை மற்றும் கால் பொருத்திட நடவடிக்கை எடுத்தனர். அதனை அடுத்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி முட நீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை இயக்குனர் வெற்றிவேல் செழியன் தலைமையில் செயற்கை அங்க வடிவமைப்பாளர்கள் பாலசந்தர், ஆனந்த் பாபு, ஜெகன் கோகுல்ராஜ் ஆகியோர் கொண்ட குழு தமிழக அரசின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் எடை குறைந்த இரு செயற்கை கைகள் மற்றும் கால்களை இலவசமாக பொருத்தினர்.

மேலும் அவருக்கு மனப்பயிற்சி உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சி ஆகியவை உடற்பயிற்சி நிபுணர்களால் வழங்கப்பட்டன.

இரண்டு கை, கால்களை இழந்தவர்க்கு அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயற்கை கை, கால்கள் பொறுத்தபடுவது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்த சுபாஷ் தனக்கு பொருத்தப்பட்டுள்ள செயற்கை கால்களை காண்பித்து செயற்கை கைகளால் கைகுலுக்கியும், நன்றி தெரிவித்தார். இதனை சிறப்பாக செய்த அரசு மருத்துவமனையை சார்ந்த மருத்துவ குழுவிற்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் பாராட்டுகளை தெரிவித்தார்.