கோவை:
கொரோனா தொற்று பரவல் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து கடந்த சில மாதங்களாக கோவையில் விமான போக்குவரத்து மெள்ள மீண்டுவர தொடங்கி உள்ளது.
கோவை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளி நாடுகளுக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான பயணிகள் மற்றும் தொழில் துறையினர் பயன் அடைந்து வருகின்றனர்.
தற்போது தினமும் 24 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 5 மாதத்தில் 7,382 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் விமானநிலையங்களின் ஓடுதளம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புனரமைக்கப்படுவது வழக்கம்.
அதன்படி, கோவை விமான நிலையத்தில் ஓடுதளம் புனரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனால் இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை – கோவா இடையே அக்டோபர் 30-ந் தேதி முதல் நள்ளிரவு விமான சேவை மீண்டும் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு டிக்கெட் முன்பதிவும் தொடங்கியது. இச்சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை விமானநிலைய அதிகாரிகள் கூறும்போது,
ஓடுதளம் புனரமைப்பு பணிகளை டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பணிகள் முடிந்துவிட்டால் ஜனவரி முதல் கோவை விமானநிலையத்தில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களிலும் விமான சேவை வழங்கப்படும் என்றனர்