எல்லோருக்கும் கல்வியை சேர்ப்போம் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் பேச்சு…

தமிழ்நாடு கல்வி ஃபெல்லோஷிப் கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட கல்வி அலுவலங்களில் செயல்படும் தமிழ்நாடு கல்வி ஃபெல்லோஷிப் உறுப்பினர்களின் ஓராண்டு நிறைவு கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். மேலும் திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி கிருஷ்ணப்பிரியா அவர்கள் மற்றும் திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) திருமதி பேபி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் இக்கூட்டத்தில் ஆசிரியர் மனசுத்திட்டம் ஒருங்கிணைப்பாளர் திரு சிகரம் சதிஷ் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். மதி பவுண்டேஷன் நிறுவனத்தின் அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
38 மாவட்டங்களின் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஃபெல்லோஸ்களின் கடந்த ஓராண்டு சிறப்பு பங்களிப்புகளையும் சாதனைகளையும் மாவட்ட தொலைநோக்கு திட்டங்களையும் பொருட்காட்சி வாயிலாக அமைச்சரின் பார்வைக்காக வைத்திருந்தனர். அதனை பார்வையிட்ட அமைச்சர் அவர்களை பாராட்டி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அமைச்சர் ஆற்றிய உரையில் தமிழ்நாடு கல்வி ஃபெல்லோஸ்களின் தரவு சார்ந்த பகுப்பாய்வுகளையும் அவர்களின் தொழில்நுட்ப செயல்பாடுகளையும் பாராட்டினார். மேலும் இந்த தர ஆய்வுகளை மேலும் துல்லியமாக மேற்கொள்ளும் படியும், உண்மையான தரவுகளை மாவட்ட அலுவலர்களிடம் கொடுக்கும் போது தான் அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய முடியும் என்றும் சட்ட மன்றத்தில் தான் பேசும் போது கூட பள்ளிக் கல்வித் துறையின் துல்லிய தரவுகளை வைத்துக் கொண்டு பேசுவதாக மேற்கோள் காட்டியிருந்தார். தமிழ்நாட்டு அரசின் பள்ளிக்கல்வித் துறையின் பல்வேறு திட்டங்களான எண்ணும் எழுத்தும், இல்லம் தேடி கல்வி, பள்ளி மேலாண்மை குழு, ஆசிரியர் திறன் மேம்பாடு, நான் முதல்வன், மற்றும் பல்வேறு திட்டங்களின் கள நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தார். தமிழ்நாடு பெல்லோஷிப் குழுவினர் பள்ளிக் கல்வித் துறையின் திட்டங்களை கள வாயிலாகவோ ஊடக வாயிலாகவோ மக்களிடம் கொண்டு சேர்க்கும் சமூக மாற்றத்திற்கான துடிப்புமிகு இளைஞர் பட்டாளமாக செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதில் ஆசிரியர் ஆசிரியைகள் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர்.