பசிபிக் கடலில் ஒரே நேரத்தில் ஐந்து புயல்கள் உருவாகியுள்ள நிலையில், அவற்றில் மூன்று புயல்கள் அதிதீவிர புயல்களாக வலுப்பெற்றுள்ளன.
இதனால் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இயற்கையின் மிகப்பெரும் அழிவு சக்திகளில் ஒன்றாகப் புயல்கள் இருந்து வருகின்றன. பலத்த காற்று, கனமழை, பெருவெள்ளம் மற்றும் கடல் சீற்றம் போன்றவற்றால் புயல்கள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக கடலோரப் பகுதிகள் புயல்களின் தாக்கத்தால் பெரும் சேதத்தைச் சந்தித்து வருகின்றன.
இந்நிலையில், கடலில் ஒரே நேரத்தில் ஐந்து புயல்கள் உருவாகியிருப்பது அரிதான மற்றும் கவனம் பெறத்தக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது. பசிபிக் கடல் பகுதியில் தற்போது போலோ, சுரிக்கே, நோலோ, ஒடாலிஸ் மற்றும் ரேச்சல் ஆகிய ஐந்து புயல்கள் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் போலோ, சுரிக்கே மற்றும் நோலோ ஆகிய மூன்று புயல்கள் அதிதீவிர நிலையை எட்டியுள்ளன. ஒடாலிஸ் மற்றும் ரேச்சல் ஆகியவை நடுத்தர வலிமை கொண்ட புயல்களாகப் பதிவாகியுள்ளன. இதுதவிர, பசிபிக் மற்றும் அட்லாண்டிக் கடல் பகுதிகளில் மேலும் மூன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களும் உருவாகியுள்ளன. போலோ புயல், கிழக்கு பசிபிக் பெருங்கடலில் மெக்சிகோ கடற்கரையை ஒட்டி உருவாகி, குறுகிய காலத்திலேயே அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.
நோலோ புயல், மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் வலுப்பெற்று, ஹவாய் தீவுகளை நோக்கி நகர்ந்து வருகிறது. அதேபோல், மேற்கு பசிபிக் பகுதியில் உருவான சுரிக்கே புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று, தைவானை நோக்கி நகர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு கடல் பகுதிகளில் ஒரே நேரத்தில் பல புயல்கள் உருவாவது இயல்பான நிகழ்வாக இருந்தாலும், ஒரே நேரத்தில் மூன்று புயல்கள் அதிதீவிர நிலையை எட்டுவது அரிதான நிகழ்வாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்னர் 2015ஆம் ஆண்டு மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் ஒரே நேரத்தில் மூன்று அதிதீவிர புயல்கள் உருவாகியிருந்தன.
புயல்கள் உருவாக கடல் நீரின் வெப்பநிலை முக்கிய காரணியாக உள்ளது. பொதுவாக, கடல் மேற்பரப்பு வெப்பநிலை சுமார் 26.5 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் இருக்கும்போது, புயல்கள் உருவாகத் தேவையான ஆற்றல் மற்றும் ஈரப்பதம் கிடைக்கிறது.
தற்போது எல் நினோ மற்றும் உலக வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணிகளால் சில கடல் பகுதிகளில் கடல் நீரின் வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் ஒரே நேரத்தில் பல தீவிர புயல்கள் உருவாகத் தேவையான சாதகமான சூழல் ஏற்படக்கூடும். மேலும், சமீபத்திய ஆண்டுகளில் கடல் நீர் அதிகளவில் வெப்பமடைந்து வருவதால், சாதாரண காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள்கூட குறுகிய காலத்தில் வேகமாக வலுப்பெற்று தீவிர புயல்களாக மாறும் நிகழ்வுகள் அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரே நேரத்தில் பல புயல்கள் உருவாகியுள்ள நிலையில், அவற்றின் நகர்வு, தீவிரம் மற்றும் கரையைக் கடக்கும் சாத்தியம் ஆகியவற்றை வானிலை ஆய்வு மையங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.








