உதய்பூரில் முதல் ஜி-20 மாநாடு: நகரை அழகுபடுத்தும் பணிகள் தீவிரம்..!

தய்பூர்: ராஜஸ்தானில் டிசம்பர் 5 முதல் 7ம் தேதி வரையில் ஜி-20 அமைப்பின் முதல் பிரதிநிதிகள் மாநாடு நடக்கிறது.

அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியனை கொண்ட ஜி-20 அமைப்பின் 17வது உச்சி மாநாடு சமீபத்தில் இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெற்றது. டிசம்பர் 1ம் தேதி முதல் அடுத்த ஓராண்டுக்கு இந்த அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கிறது. இந்தியாவில் அடுத்தாண்டு செப்டம்பர் 9-10ம் தேதிகளில் இதன் உச்சி மாநாடு நடைபெறும். இது மட்டுமின்றி அடுத்த ஓராண்டில் இந்தியாவில் 200 ஜி-20 மாநாடுகளை நடத்துவதற்கு ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூரில் டிசம்பர் 5 முதல் 7ம் தேதி வரையில், இந்தியா தலைமையின் கீழ் ஜி-20 நாடுகளின் முதல் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக இந்த நகரை அழகுபடுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. சுவரில் ஓவியம் வரைவது முதல் இந்திய கலாசாரத்தை சித்தரிப்பது, பாரம்பரிய தலங்களை வண்ண விளக்குகளால் அலங்கரிப்பது, சாலைகளை சீரமைத்து அழகுபடுத்துவது உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.