பேஸ்புக், ட்விட்டருக்கு செக் வைத்த மத்திய அரசு… வருகிறது புதிய சட்டம்.!!

டெல்லி : சமூக வலைதளங்களின் குறைதீர்ப்பு அதிகாரிகள் வழங்கும் தீர்வுகளில் மாற்றுக் கருத்து இருப்பின், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தனி அதிகாரம் பெற்ற மேல்முறையீட்டு கமிட்டியை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் கருத்தின் அடிப்படையில் விதிமுறையில் திருத்தம் செய்யப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும்.

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த சர்வதேச அளவில் அமைக்கப்படும் முதல் மேல்முறையீட்டு கமிட்டியாக இது இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை பல கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் சமீப சில ஆண்டுகளில் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்களில் போலியான தகவல்கள், வெறுப்பு கருத்துகள் பரப்பப்படுவதால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

சமூக ஊடகங்களில், நாட்டின் இறையாண்மை, பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் பொய்யான தகவல்களும், தனிநபர்கள் குறித்து அவதுாறான கருத்துகளும், மதம் சார்ந்து வெறுப்புணர்வை துாண்டும் பதிவுகளும் கட்டுப்பாடுகள் இன்றி பகிரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவற்றைக் கட்டுப்படுத்தவும், இந்த பதிவுகளால் பாதிக்கப்படும் தனிநபர்களுக்கு நியாயம் கிடைக்கவும், மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப விதிகளை கடந்த ஆண்டு அமல்படுத்தியது.

அதன்படி, 50 லட்சத்துக்கும் அதிகமான பயனாளர்களை உடைய சமூக வலைதள நிறுவனங்கள், குறைதீர்ப்பு அதிகாரி, உதவி அதிகாரி மற்றும் அவர்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றுவதை கண்காணிக்க தனி அதிகாரிகளை உள்நாட்டிலேயே நியமிப்பதை கட்டாயமாக்கியது. இந்த உத்தரவை நிறைவேற்றாமல் ட்விட்டர் நிறுவனம் காலம் தாழ்த்தியதை அடுத்து மத்திய அரசின் கடும் நடவடிக்கைக்கு ஆளானது. இறுதியில் அந்நிறுவனமும் குறைதீர்ப்பு அதிகாரிகளை நியமித்தது.

இந்த குறைதீர்ப்பு அதிகாரிகளால் வழங்கப்படும் தீர்வுகள் பாரபட்சமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. பயனாளர்களின் பதிவுகள் முறையான காரணம் இன்றி நீக்கப்படுவதாகவும், கணக்குகள் முடக்கப்படுவதாகவும் பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, இதற்கு தீர்வு காணும் வகையில், குறைதீர்ப்பு மேல்முறையீட்டு கமிட்டி என்ற புதிய அமைப்பை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக, தகவல் தொழில்நுட்ப வழிகாட்டு நெறிமுறை, டிஜிட்டல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளது. அதன்படி, தனிநபர்களின் மேல்முறையீட்டு மனு மீது இந்த கமிட்டி, 30 நாட்களில் தீர்வு காண வேண்டும் என்ற கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, பயனாளர்கள் அளிக்கும் புகார்கள், அரசின் 10 வகையான விதிமீறல்களின் கீழ் வந்தால், அதன்மீது, 72 மணி நேரத்திற்குள் பதில் அளிக்கவும் சமூக வலைதள நிறுவனங்களுக்கு இந்த புதிய திருத்தம் வாயிலாக கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்தம் குறித்து, அடுத்த 30 நாட்களில் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் கருத்தின் அடிப்படையில் விதிமுறையில் திருத்தம் செய்யப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும். குறைதீர்ப்பு மேல்முறையீட்டு கமிட்டி அமைக்க அனுமதி அளிக்கப்பட்டால், சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த சர்வதேச அளவில் அமைக்கப்படும் முதல் மேல்முறையீட்டு கமிட்டியாக இது இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கடந்த வாரம், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இதே முன்மொழிவுடன் ஒரு வரைவை வெளியிட்டது. ஆனால் சில மணி நேரங்களில் அதை திரும்பப் பெற்றது. இந்நிலையில், மீண்டும் வெளியிடப்பட்ட புதிய வரைவு, முந்தைய முன்மொழிவைப் போலவே உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், எதற்காக முந்தைய வரைவு திரும்பப் பெறப்பட்டது என மத்திய அரசு விளக்கம் அளிக்கவில்லை.