கோவை அரசு நிலத்தில் கனிம வளம் சுரண்டப்படுவதாக பரபரப்பு புகார் – அதிர்ச்சி அளிக்கும் வீடியோ காட்சிகள்.!!

கோவை மாவட்டம், கோவனூர் பள்ளத்தாக்கு பகுதியில் அரசு நிலத்தில் கனிம வளம் எடுக்கப்படுவதாக புகார் எழுந்து உள்ளது.

கோவை மாவட்டம், வடக்கு தாலுகாவுக்கு உட்பட்ட கோவனூர் பள்ளத் தாக்கு பகுதியில் எண் 2, கூடலூர் நகராட்சிக்கு உள்பட்ட கட்டாஞ்சி மலையடிவாரப் பகுதியானது மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். மேலும், வனத்தை ஒட்டிய பகுதிகள் விலங்குகள் அதிக அளவில் நடமாடக் கூடிய பகுதியாகவும் உள்ளது.

இந்த பகுதியில் உள்ள பூமி தான இடம், அரசு புறம்போக்கு இடங்களில் சுமார் 40 அடி ஆழம் வரை தோண்டப்பட்டு மர்ம நபர்களால் கனிம வளம் சுரண்டப்படுவதாக புகார் எழுந்து உள்ளது.

இது குறித்து தடாகம் பள்ளத் தாக்கு பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த எஸ்.கணேஷ் கூறும் போது:


கோவை மாவட்டத்தில் மலைதள பாதுகாப்பு இடங்கள், வன விலங்குகள் நடமாடும் பகுதிகளில் கனிமவள சுரண்டல் தொடர்ந்து நடைபெறுகிறது. கட்டாஞ்சி மலையடிவாரப் கோவனூர் பகுதியில் யானைகள் வழித் தடங்கள், ஓடைகளை அழித்து மண் வளம் சுரண்டப்படுகிறது. அரசு நிலத்தை சுரண்டுபவர்கள் குறித்து அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. சம்பந்தப்பட்ட இடம் கோவை வனக் கோட்டத்துக்குள் பெரியநாயக்கன் பாளையம் வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதியாகும்.

இந்த பகுதியில் அனுமதி பெறாமல் கனிம வளக் கொள்ளை நடைபெறுவது தொடர்பாக உயர்நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போதே, இந்த சுரண்டல் தடையின்றி நடைபெறுவது வேதனை அளிக்கிறது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.