இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துதான் – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சர்ச்சை பேச்சு..!

நாட்டில் வாழும் ஒவ்வொரு நபரும் இந்து என்றும், அனைத்து இந்தியர்களின் டி.என்.ஏ-வும் ஒன்றுதான் என்றும், அவர்களுடைய சடங்குகளை யாரும் மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

சத்தீஸ்கரின் சுர்குஜா மாவட்டத்தின் தலைமையகமான அம்பிகாபூரில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் பழமையான அம்சம் என்று திரும்பத் திரும்ப எடுத்துரைத்தார். மேலும், இந்துத்துவம்தான் உலகில் அனைவரையும் அழைத்துச் செல்வதை நம்புகிறது என்று கூறினார்.

‘இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்கள் என்று ஆர்.எஸ்.எஸ் த் தொடங்கப்பட்ட 1925-ல் இருந்து சொல்லி வருகிறோம். மதம், கலாச்சாரம், மொழி, உணவுப் பழக்கம், சித்தாந்தம் எதுவாக இருந்தாலும், இந்தியாவைத் தங்கள் தாய்மண்ணாகக் கருதி, வேற்றுமையில் ஒற்றுமை பண்பாட்டுடன் வாழ விரும்புவோர், இந்த வழியில் முயற்சி செய்பவர்கள், இந்துக்கள்தான் என்று மோகன் பகவத் கூறினார்.

இந்துத்துவாவின் சித்தாந்தம் பன்முகத்தன்மையை அங்கீகரிக்கிறது மற்றும் மக்களிடையே ஒற்றுமையை நம்புகிறது என்று கூறினார்.

‘ஒட்டுமொத்த உலகிலும் இந்துத்துவா மட்டுமே வேற்றுமைகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்று நம்புகிறது, ஏனெனில் அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த நாட்டில் இத்தகைய வேறுபாடுகளை ஒன்றாகக் கொண்டுள்ளது. இதுதான் உண்மை இதை உறுதியாகப் பேச வேண்டும். அதன் அடிப்படையில் நாம் ஒற்றுமையாக இருக்க முடியும். தனிநபர் மற்றும் தேசியத் தன்மையைக் கட்டியெழுப்புவதும், மக்களிடையே ஒற்றுமையைக் கொண்டுவருவதும்தான் சங்கத்தின் பணி,’ என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.

அனைவரின் மத நம்பிக்கைக்கும் மதிப்பளிப்பதை வலியுறுத்திய அவர், அனைத்து இந்தியர்களின் டி.என்.ஏ-வும் ஒன்றுதான் என்றும் அவர்களுக்கு பொதுவான மூதாதையர்கள் இருப்பதாகவும் வலியுறுத்தினார்.

‘பல வேறுபாடுகள் இருந்தபோதிலும் நாம் அனைவரும் ஒரே மாதிரியாக இருக்கிறோம். நமக்கு பொதுவான மூதாதையர்கள் இருந்தனர். 40,000 ஆண்டுகள் பழமையான ‘அகண்ட பாரதத்தின்’ ஒரு பகுதியாக இருக்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் பொதுவான டி.என்.ஏ உள்ளது. நம் முன்னோர்கள் ஒவ்வொருவரும் அவரவர் நம்பிக்கை மற்றும் சடங்குகளை கடைபிடிக்க வேண்டும். மற்றவர்களின் நம்பிக்கையை மாற்ற முயலக்கூடாது என்றும் போதித்துள்ளனர். ஒவ்வொரு பாதையும் ஒரு பொதுவான இடத்திற்கு இட்டுச் செல்கிறது’ என்று மோகன் பகவத் கூறினார்.

அனைத்து மத நம்பிக்கைகளையும் அவர்களின் சடங்குகளையும் மதிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு விடுத்தார்.

மேலும், ‘ஒவ்வொருவரின் நம்பிக்கையையும் சடங்குகளையும் மதிக்கவும். அனைவரையும் ஏற்று உங்கள் வழியில் நடக்கவும். உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுங்கள், ஆனால், மற்றவர்களின் நலனில் அக்கறை காட்டாமல் சுயநலமாக இருக்காதீர்கள்’ என்று மோகன் பகவத் கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த ஒட்டுமொத்த நாடும் ஒன்றிணைந்து போராடியது என்று மோகன் பகவத் கூறினார்.

‘நமது பண்பாடுதான் நம்மை இணைக்கிறது. நமக்குள் எவ்வளவு சண்டை போட்டாலும், நெருக்கடியான சமயங்களில் நாம் ஒற்றுமையாகி விடுகிறோம். நாடு ஏதேனும் பிரச்சனைகளை சந்திக்கும் போது நாம் ஒன்றுபட்டு போராடுவோம். கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது முழு நாடும் அதைச் சமாளிக்க ஒன்றாக நின்றது’ என்று மோகன் பகவத் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் கூட்டம் மற்றும் ஷாகாஸ் நிகழ்ச்சிகளைப் பார்வையிட மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த அவர், 97 ஆண்டுகால அமைப்பின் நோக்கம் மக்களை ஒன்றிணைத்து, சத்தியத்தின் பாதையில் நடக்கும்போது சமூகங்களை செல்வாக்கு செலுத்துவதாகும் என்றார்.

‘சங்கத்தை பார்வையாளராக தூரத்தில் இருந்து பார்க்காதீர்கள். உங்கள் ஆளுமையை நாட்டுக்கு பயனுள்ளதாக்கி, நாட்டின் நலனுக்காகவும், சமுதாய நலனுக்காகவும் பாடுபடுங்கள். அத்தகைய வாழ்க்கையை நடத்த ஸ்வயம்சேவக் ஆகுங்கள்’ என்று மோகன் பகவத் கூறினார்.