கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள வாகராயம்பாளையம் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் குமார் (வயது 25). மில் தொழிலாளி. இவரது மனைவி கீதா (22).
இவர் கடந்த 12-ந் தேதி கோவில் திருவிழாவுக்காக பட்டக்காரன் புதூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றார். பின்னர் துணி எடுப்பதற்காக புளியம்பட்டி சென்றார். அங்கிருந்து வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது புளியம்பட்டி பஸ் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் தனியாக எங்கு செல்வது என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தார். இதனை பார்த்த கீதா அவரின் அருகே சென்று ஏன் தனியாக நிற்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த இளம்பெண் தான் ராமநாதபுரத்தில் இருந்து வந்ததாகவும், தனது பெயர் அனுசியா (24) என்றும் கூறியுள்ளார். பின்னர் தனக்கு யாரும் இல்லை என்றும், ஏதாவது வேலை கொடுத்தால் பிழைத்துக் கொள்வேன் என்று கூறினார். இதை கேட்டு பரிதாபப்பட்ட கீதா அந்த இளம்பெண் அனுசியாவை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். பின்னர் அந்த பகுதியில் உள்ள மில்லில் அவரை வேலைக்கு சேர்த்து விட்டார். கடந்த 5 நாட்களாக வேலைக்கு சென்று வந்த அனுசியா திடீரென தனது பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லை சொந்த ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
பின்னர் கீதா வழக்கம்போல தனது வீட்டில் உள்ள பீரோவை திறந்து பார்த்தார். அப்போது அதில் இருந்த 4½ பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. அனுசியாவை செல்போனை தொடர்பு கொண்டபோது அவர் எடுக்கவில்லை என தெரிகிறது.
இதுகுறித்து கீதாவின் கணவர் குமார் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆதரவு கொடுத்த வீட்டில் நகைகளை திருடிச் சென்ற இளம்பெண் தேடி வருகின்றனர்.
Leave a Reply