கேரளாவில் அமலாக்கத் துறை அதிரடி ரெய்டு… ரூ.1.5 கோடி மதிப்பிலான 15 நாடுகளின் கரன்சி பறிமுதல்.!!

கேரளத்தில் ஹவாலா பணப் பரிமாற்ற முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை நடத்திய தொடா் சோதனைகளில் ரூ,1.50 கோடி மதிப்பிலான 15 வெளிநாடுகளின் கரன்சியும், ரூ.1.40 கோடி இந்திய ரூபாயும் கைப்பற்றப்பட்டன.
கேரளத்தில் அதிக எண்ணிக்கையிலான நபா்கள் வெளிநாடுகளில் சென்று சம்பாதித்து வருகின்றனா். மேலும், அங்கு சட்டவிரோதமாக வெளிநாட்டுப் பணம் மாற்றி தரப்படுவதாகவும், ஹவாலா முறையில் பணப் பரிமாற்றம் நடைபெறுவதாகவும் புகாா்கள் அதிகம் எழுந்தன. இதைடுத்து, சட்டவிரோத வெளிநாட்டு பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையினா் கேரளத்தில் 14 இடங்களில் கடந்த 19-ஆம் தேதி சோதனை நடத்தினா். வெளிநாட்டு பணப் பரிமாற்ற நிறுவனங்கள், நகைக் கடைகள், ஜவுளிக் கடைகள், ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், பரிசுப் பொருள் தயாரிப்பு கடைகள் உள்ளிட்டவற்றில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

இதில் ரூ.1.50 கோடி மதிப்பிலான 15 வெளிநாடுகளின் கரன்சியும், ரூ.1.40 கோடி இந்திய ரூபாயும் கைப்பற்றப்பட்டன. சுரேஷ் ஃபாரெக்ஸ், துபை ஃபாரெக்ஸ், சங்கீதா ஃபாரின் எக்ஸ்சேஞ்ச், கிரசென்ட் டிரேடிங், ஃபா்னஸ் ஃபாரெக்ஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் சட்டவிரோதமாக ஹவாலா முறையில் பணப் பரிமாற்றம் செய்வதை முக்கியத் தொழிலாகக் கொண்டுள்ளன. துபை, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கு இவா்கள் ஹவாலா முறையில் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்துள்ளனா். பல கோடி ரூபாய் மதிப்பிலான பணம் இவ்வாறு சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.