மின் கட்டண உயர்வு: உண்மைக்கு புறம்பாக  பதிலளிக்கும் தி.மு.க – பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு…

மின் கட்டண உயர்வு: உண்மைக்கு புறம்பாக  பதிலளிக்கும் தி.மு.க – பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

தமிழக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து கோவை மாவட்ட பா.ஜ.க சார்பில், பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் தற்போது மின் கட்டணம் உயர்த்தப்படுள்ளது. இதனை கண்டித்து கோவை மாவட்ட பா.ஜ.க சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்தும், மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கண்டித்தும், தி.மு.க அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப் பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியதாவது:

சமுதாயத்தில் அனைவரையும் பாதிக்க கூடிய அளவில் மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். மத்திய அரசு கூறியதால் கட்டணத்தை உயர்த்தி உள்ளோம் என உண்மைக்கு புறம்பாக தி.மு.க பதில் அளிக்கிறது.

தமிழகத்தில் அனைத்தையும் நாங்களாகவே பார்த்து கொள்ள முடியும், அனைத்தையும் நாங்களாகவே நிர்வகித்து கொள்ள முடியும் என ஒரு புறம் கூறி விட்டு மறுபுறம் மின்சாரம் மாதிரியான தேவையானவற்றை கூட கொடுக்க முடியாத சூழ்நிலையில் தி.மு.க அரசு நடந்து கொண்டிருக்கிறது.
அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. முதல்வரின் கட்டுபாட்டில் காவல்துறை மட்டுமல்லாமல், எந்த அமைச்சர்களும் இல்லை என்பது சிறிது சிறிதாக நிரூபணமாகிறது.

சிலிண்டர், பெட்ரோல் டீசல் விலைக்கு பா.ஜ.க ஆர்ப்பாட்டம் நடத்துவதில்லை என்று சிலர் கூறி வருவதற்கு கருத்து கேட்டதற்கு பதிலளித்த அவர், சிலிண்டர் மற்றும் பெட்ரோல் டீசல் நமது நாட்டில் உற்பத்தியாகவில்லை. அது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பொருள் என்பதால், ஒவ்வொரு நாளும் விலைவாசி மாறிக்கொண்டிருக்கும். நமது கட்டுப்பாட்டில் உள்ளவற்றை நாம் சரியாக செய்கிறோமா என்பது தான் விஷயம் எனவும் பதில் அளித்தார்.

மேலும் தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என வாக்குறுதி அளித்தும் ஏன் குறைக்கவில்லை என கேள்வி எழுப்பினார். உதய் மின் திட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இங்கு மின்சார உற்பத்தி என்பது நாளுக்கு நாள் பெருகிக் கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை அதிகமாக தொழிற்சாலை இருக்கின்ற மாநிலம். அவ்வாறு இருக்கும் பொழுது அடுத்த பத்து வருடத்திற்கு தேவையான மூலதனத்தை ஏன் உருவாக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

மேலும் மத்திய அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதனை எதிர்ப்போம் என மாநில அரசு கூறி வந்தால் மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். அதற்கு சிறந்த உதாரணம் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என தெரிவித்தார்.

தமிழகத்தை விட கர்நாடகா, குஜராத் போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மின் கட்டணம் உயர்வாக உள்ளதற்கு பா.ஜ.க ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளுமா என கேள்வி எழுப்பியதற்கு, அந்தந்த மாநிலங்களில் இருக்கக் கூடிய பா.ஜ.க வினர் அதன் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள். தமிழகத்தில் உள்ள பா.ஜ.க வினருக்கு தமிழக மக்களின் நலன் முக்கியம் என பதில் அளித்தார்.

இதில் பா.ஜ.க கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, பா.ஜ.க இளைஞரணி செயலாளர் பிரீத்தி லட்சுமி உட்பட கோவை மாவட்டத்தை சேர்ந்த  நூற்றுக் கணக்கான மேற்பட்ட பா.ஜ.கவினர் கலந்து கொண்டனர்.