அதிமுகவிலிருந்து எடப்பாடி நீக்கம்: ஓ.பன்னீர்செல்வம் பதிலடி..!

அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நிக்க வேண்டுமென பொதுக்குழு உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கும் சிறப்புத் தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கொண்டுவந்தார்.

கட்சி விதி 35-இன் படி ஓபிஎஸ் நீக்கப்படுவதாகவும், அவருடன் அதிமுகவினர் யாரும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுபோலவே வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோரையும் நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ‘அதிமுகவின் விதிகளின்படி ஒன்றரை கோடி தொண்டர்களால் நான் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். என்னை கட்சியில் இருந்து நீக்குவதற்கு இபிஎஸக்கும் முனுசாமிக்கும் அதிகாரமில்லை’ என்று தெரிவித்தார்.

மேலும், ‘அதிமுக சட்ட விதிகளுக்கு புறம்பாக தன்னிச்சையாக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குகிறேன்’ என்று அறிவித்தார்.