கொரோனா பரவல் எதிரொலி: பள்ளிகளில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம்-பள்ளி கல்வித் துறை அதிரடி உத்தரவு..!!

அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளில் மீண்டும் முகக்கவசம்
கட்டாயம் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் கடந்த 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு வழக்கமான வகுப்புகள், புதிய மாணவர் சேர்க்கை, உயர்கல்வி பயில
உள்ள மாணவர்களுக்கான சான்றிதழ் விநியோகம் உள்ளிட்ட பணிகள் பள்ளிகள்
நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அனைத்து வகை பள்ளிகளுக்கும், பள்ளிக் கல்வித் துறை ஆணையர்
நந்தகுமார் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: மாநிலத்தில் ஒரு சில மாவட்டங்களில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாகவும், மாணவர்கள் அதிகம் பயிலும் கல்வி நிலையங்கள் மூலமாக தொற்று பரவ வாய்ப்புள்ளதாக பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

எனவே, பள்ளிகளில் மீண்டும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதையும், தடுப்பூசி செலுத்தியிருப்பதையும், தனி மனித இடைவெளியை பின்பற்றுவதையும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்துகொள்வதையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

பள்ளி வாயில்களில் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். யாருக்கேனும் உடல் வெப்பநிலை அதிகமாக பதிவானால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். மேற்கண்ட வழிமுறைகளை அனைவரும் கட்டாயம் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.