சீன பொருட்களை புறக்கணிக்கும் வகையில் இ-காமர்ஸ் கொள்கையை மாற்ற வேண்டும்- இந்திய வர்த்தக தொழில்துறை வேண்டுகோள்..!

புதுடெல்லி: சீன தயாரிப்புகளை புறக்கணிக்கும் வகையில் ஒன்றிய அரசு தனது இ-காமர்ஸ் கொள்கையை மாற்ற வேண்டும் என்று இந்திய வர்த்தக – தொழில்துறை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையிலான மோதலால், ‘சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை மீண்டும் வலுத்து வருகிறது. தலைநகர் டெல்லியின் கன்னாட் பிளேஸில் உள்ள வர்த்தகர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை (சி.டி.ஐ) சார்பில் ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதுகுறித்து சி.டி.ஐ தலைவர் பிரிஜேஷ் கோயல் கூறுகையில், ‘வெளிநாட்டிலிருந்து இந்திய சந்தைக்கு வரும் ஒவ்வொரு பொருட்களிலும் அந்த தயாரிப்பு மற்றும் நாட்டின் விபரங்கள் வெளியிடுவதை கட்டாயமாக்க வேண்டும். அந்த பொருட்கள் சீனாவிலிருந்து வந்திருந்தால், அவற்றை புறக்கணிக்க வேண்டும். இதன் மூலம் இந்திய வர்த்தக சந்தையில் சீனாவுக்கு பாடம் கற்பிக்க முடியும். இ-காமர்ஸ் மற்றும் இறக்குமதி கொள்கையை ஒன்றிய அரசு மாற்றயமைக்க வேண்டும்.

சீனாவின் பொருளாதார பலத்தை முறியடிக்க வேண்டும். இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 103.63 பில்லியன் டாலரைத் தாண்டியது. உள்நாட்டு வர்த்தக பற்றாக்குறை 75.69 பில்லியன் டாலருக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில், சீனாவிலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி 89.66 பில்லியன் டாலராக இருந்தது. இந்திய வர்த்தகர்களும், நுகர்வோர்களும் சீனப் பொருட்களை புறக்கணித்தால், சீனாவின் வர்த்தகம் பாதிக்கும். சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 13.97 பில்லியன் டாலர் என்றாலும் அது தற்போது 36.4 சதவீதமாக குறைந்துள்ளது’ என்று கூறினார்.