டோண்ட் வ்வொரி… அக்னிபாத் வீரர்களுக்கு வேலை நாங்க தருகிறோம் – ஆனந்த் மஹிந்திரா வெளியிட்ட அதிரடி ட்விட் ..!!

டெல்லி: அக்னிபாத் திட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இது தொடர்பாகப் பிரபல தொழிலதிபர் ஆனந்த மகேந்திரா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ராணுவத்திற்கு ஆள் சேர்க்க அக்னிபாத் என்ற புதிய திட்டத்தைக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ் இணைபவர்கள் 4 ஆண்டுகள் பணிபுரிவார்கள்.

அதன் பின்னர் அவர்களில் 75% பேர் ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். மீதமுள்ளவர்களில் 25% பேர் மட்டுமே ராணுவத்தில் தொடர்வார்கள் என்பதே இத்திட்டத்தின் அடிப்படை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ராணுவத்திற்கு ஆட்சேர்பு எதுவும் நடைபெறாமல் இருந்தது. இந்தச் சூழலில் மத்திய அரசு இப்படியொரு திட்டத்தை அறிவித்தது ராணுவத்திற்குத் தயாராகும் வீரர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். முதலில் பீகார் மாநிலத்தில் தொடங்கிய இந்தப் போராட்டம், பின்னர் பல்வேறு மாநிலங்களுக்கும் பரவியது. இந்தப் போராட்டத்தைக் கண்டித்துப் பல இடங்களில் ரயில் எரிப்பு சம்பவங்களும் கூட நடைபெற்றன.

4 ஆண்டுகளுக்குப் பின்னர், அக்னிபாத் வீரர்கள் என்ன செய்வார்கள் என்பதே கேள்வியாக இருந்தது. இதையடுத்து துணை ராணுவப் படை, விமான போக்குவரத்துத் துறை உள்ளிட்டவற்றில் அக்னிபாத் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், போராட்டம் ஓயவில்லை. இந்தத் திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று வட மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டமும் நடைபெறுகிறது.

இதற்கிடையே அக்னிபாத் திட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் பல விதமான கருத்துகளைக் கூறி வருகின்றனர். அதன்படி பிரபல தொழிலதிபர் ஆனந்த மகேந்திரா அக்னிபாத் திட்டத்தை வரவேற்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். வன்முறையால் வருத்தம் அடைவதாகத் தெரிவித்த தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா, அக்னி வீரர்களின் ஒழுக்கமும் திறமையும் அவர்களைச் சிறப்பான வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தரும் எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “அக்னிபத் திட்டத்தைச் சுற்றி நடந்த வன்முறையால் வருத்தம் அடைந்தேன். கடந்த ஆண்டு இத்திட்டம் முன்மொழியப்பட்டபோதும் சரி, இப்போதும் சரி நான் சொல்வது ஒன்று தான்! அக்னி வீரர்களின் ஒழுக்கம் மற்றும் திறன்கள் அவர்களைச் சிறந்த வேலைவாய்ப்பிற்கு ஏற்றவர்களாக மாற்றும். அத்தகைய பயிற்சி பெற்ற, திறமையான இளைஞர்களை பணியமர்த்தும் வாய்ப்பை மகேந்திரா குழுமம் வரவேற்கிறது” என்று ட்வீட் செய்துள்ளது.

இதற்கு நெட்டிசன்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்த நிலையில், பயனாளி ஒருவர் அக்னி வீரர்களுக்கு மகேந்திரா நிறுவனத்தில் என்ன மாதிரியான வேலை கிடைக்கும் என கேட்டார். அதற்குப் பதிலளித்த அவர், “கார்ப்பரேட் துறையில் அக்னிவீர்களுக்கு மிகப் பெரிய வேலைவாய்ப்புகள் உள்ளன. தலைமைத்துவம், குழுவாக இணைந்து பணிபுரிவது மற்றும் உடல் பயிற்சி ஆகியவற்றை அக்னி வீரர்கள் கொண்டுள்ளனர். இது தொழில்துறைக்குத் தேவையான தொழில்முறை தீர்வுகளை வழங்குகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஆனந்த் மகேந்திராவின் இந்த ட்வீட் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. நான்கு ஆண்டுகள் பணிக்காலத்திற்குப் பின்னர் அக்னி வீரர்கள் என்ன செய்வார்கள் என்பதே பெரிய கேள்வி! இந்தச் சூழலில் கார்ப்பரேட் துறையில் அவர்களுக்கு ஏற்ற வேலை நிறைய உள்ளதாக ஆனந்த் மகேந்திரா கூறி உள்ளதை இத்திட்டத்தின் ஆதரவாளர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.