பாஜக போன்ற கலவர கட்சிகளை உள்ளே விடாதீங்க – கோவை மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்.!!

கோவை: “கோவை மக்கள் அமைதியை விரும்ப கூடியவர்கள். பாஜக போன்ற கலவரக் கட்சிகளை உள்ளே விட்டால், அமைதி போய்விடும்.

தொழில் வளர்ச்சி போய்விடும். நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியாது” என்று கோவையில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பேசினார்.

கோவையில் நேற்று பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்றனர். கோவை வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி வேட்பாளர் ஈஸ்வரசாமி, கரூர் வேட்பாளர் ஜோதிமணி ஆகியோரை அறிமுகப்படுத்தி ‘இந்தியா’ கூட்டணிக்கு இருவரும் வாக்கு சேகரித்தனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது பாஜக, பிரதமர் மோடி, அதிமுக, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்தார். கோவையில் பாஜக வேட்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடும் நிலையில், கோவையில் பாஜகவை நுழைய விடக்கூடாது என ஸ்டாலின் கூறினார். இதுதொடர்பாக ஸ்டாலின் பேசியதாவது:

10 ஆண்டுகள் ஆட்சி செய்தும் சாதனைகள் என்று தமிழகத்துக்கு சிறப்பு திட்டங்கள் என்று எதையும் சொல்ல முடியாமல் அவதூறு செய்யும் பிரதமர் ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம், பத்தாண்டுகள் தமிழகத்தைச் சீரழித்த பழனிசாமி. நடப்பது இந்தியாவை யார் ஆளவேண்டும் என்பதற்கான நாடாளுமன்ற தேர்தல். இந்தியா ட்டணிதான் ஆளவேண்டும் என்று நாம் சொல்கிறோம். ஆனால், அதிமுகவைப் பொறுத்தவரை, யார் ஆளவேண்டும் என்று சொல்லாமல் யார் ஆளக்கூடாது என்றும் சொல்லாமல், யார்தான் உண்மையான எதிரி என்றே தெரியாமல், எதற்காகத் தேர்தலில் நிற்கிறோம் என்ற தெளிவே இல்லாமல், கள்ளக்கூட்டணிக்கு ஆதாயம் தேடித்தரக் களத்துக்கு வந்திருக்கிறார் பழனிசாமி.

தன்னைச் சுற்றியிருந்த அத்தனை பேரையும் முதுகில் குத்திய பழனிசாமி, பாஜகவின் கூட்டணி முறிந்துவிட்டது என்று சொன்னார். சரி ஏன் எதிர்த்து பேசவில்லை என்று நாங்கள் கேட்டால், பாஜகவை எதிர்த்துப் பேச முடியாது அது கூட்டணி தர்மம் என்று சொல்கிறார். இப்படிப்பட்டவர்களை பற்றி என்ன பேசுவது? ஒரே வரியில் சொல்லவேண்டும் என்றால், “சிம்பிளி வேஸ்ட்”.

நம்மைப் பொறுத்தவரைக்கும், மூன்றே ஆண்டுகளில் நம்முடைய திராவிட மாடல் அரசு எத்தனையோ சாதனைகளை செய்திருக்கிறது. நம்முடைய சாதனைகளைத்தான் அடையாளமாகக் காட்டி, நாங்கள் வாக்கு கேட்கிறோம். ஒவ்வொரு கூட்டத்திலும் நம்முடைய திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளைப் பற்றி சொல்கிறேன். இப்படி நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய நாங்கள் பணியாற்றிக்கொண்டு இருந்தால் தொழில்வளம் மிகுந்த இந்தக் கோவையை கடந்த 10 ஆண்டாக பாஜக எப்படியெல்லாம் நாசமாக்கி இருக்கிறது என்று சொல்லட்டுமா?

பாஜக ஆட்சியில் இரண்டு பெரிய தாக்குதல் நடத்தியது. கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்று சொல்லி, ஏழைகளின் சுருக்குப்பையில் இருந்த பணத்தையும் பறித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான் முதல் தாக்குதல். இதனால் பணப்புழக்கம் குறைந்து, பல தொழில்கள் முடங்கிப் போனது. இரண்டாவது தாக்குதல், ஜிஎஸ்டி என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து, இந்தக் கோவையில் முதலாளிகளாக இருந்தவர்களை எல்லாம், கடனாளிகளாக மாற்றினார்கள். பலர் தங்களின் கம்பெனிகளை இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

அதுமட்டுமல்ல வங்கதேசத்துடன் பாஜக அரசு போட்ட ஒப்பந்தத்தால், இங்கு உருவான நூலும்-துணியும் தேங்கிக் கிடக்கிறது. 35 விழுக்காடு மில்களை, மூட வேண்டிய நிலையில் இந்த மேற்கு மண்டலம் இருக்கிறது. இரண்டு முறை கோவைப் பகுதிக்கு வந்து, கொங்கு பகுதி எனக்கு மிகவும் நெருக்கமான பகுதி என்று பிரதமர் பேசினாரே, திமுக தமிழகத்துக்கான வளர்ச்சித் திட்டங்களைத் தடுக்கிறது என்று சொன்னாரே, எப்படிப்பட்ட வடிகட்டிய பொய் இது. இந்தக் கோவை பொதுக்கூட்ட மேடையில் இருந்து, நான் பகிரங்கமாக ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறேன்.

தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மிகப்பெரிய தொழில் நிறுவனம், 6500 கோடி ரூபாய் முதலீட்டில் கோவையை சேர்ந்த பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் முதலீட்டை மேற்கொள்வதாக முடிவானது. தமிழக அரசும் இதற்கான எல்லா பேச்சுவார்த்தைகளும் முடிந்த பிறகு, அவர்களை மிரட்டி அந்தத் தொழில் திட்டத்தை குஜராத்துக்கு மாற்றிவிட்டார்கள். இதுதான் கோவைக்கான பாஜகவின் போலிப் பாசம். எதிர்காலத்தில், மிகப் பெரிய வாய்ப்புகளைத் தரும், செமிகண்டக்டர் தொழில் திட்டத்தை குஜராத் மாநிலத்துக்கு மிரட்டி மடைமாற்றியது பாஜக தான்.

எப்படி கூச்சமே இல்லாமல் ஓட்டு கேட்டு வருகிறீர்கள்? கோவையில் இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா? கோவை மக்கள் மேல் ஏன் உங்களுக்கு இவ்வளவு வன்மம்? கோவை மக்கள் அமைதியை விரும்பக் கூடிய மக்கள். அமைதியான இடத்தில்தான் தொழில் வளரும், தொழில் வளர்ச்சி இருக்கும், நிறுவனங்களை நடத்த முடியும். பாஜக போன்ற கலவரக் கட்சிகளை உள்ளே விட்டால், அமைதி போய்விடும். தொழில் வளர்ச்சி போய்விடும். நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியாது.

தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுப்பது யார் என்று தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால், பிரதமர் இங்கு வந்து, இட்லி பிடிக்கும், பொங்கல் பிடிக்கும், தமிழ் பிடிக்கும், தமிழகம் பிடிக்கும் என்று பேசும் போலி முகமூடி மொத்தமாகக் கிழிந்து தொங்கிவிட்டது! இப்படி ‘கோவை வேண்டாம்’- ‘தமிழ்நாடு வேண்டாம்’ என்று புறக்கணித்த மோடிக்கு இப்போது தமிழகம் சொல்ல வேண்டியது என்னவென்றால் ‘வேண்டாம் மோடி’ சொல்லுங்கள், ‘வேண்டாம் மோடி’ இன்னும் சத்தமாக ‘வேண்டாம் மோடி’ தெற்கிலிருந்து வரும் இந்தக் குரல், இந்தியா முழுவதும் கேட்கட்டும். தமிழக வளர்ச்சியைத் தடுத்தால், தமிழ்மொழியைப் புறக்கணித்தால், தமிழ்ப் பண்பாட்டுமேல் தாக்குதல் நடத்தினால், தமிழக மக்களின் பதில் எப்படி இருக்கும் என்று ஏப்ரல் 19ம் தேதி உங்கள் வாக்குகள் மூலம் நிரூபிக்க வேண்டும்” என்றார்.