பாஜக கூட்டணி கூட்டத்திற்கு செல்லும் திமுக எம்.பி..?

வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆட்சியைத் தக்க வைக்க பா.ஜ.க-வும், ஆட்சியைப் பிடிக்க எதிர்க்கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அதன்படி வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் பீகார் மாநிலத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள பல தலைவர்கள் கலந்து கொண்டு பாஜகவுக்கு எதிராக பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் காங்கிரஸ் தலைமையில் இன்றும், நாளையும் நடைபெற்ற வருகிறது.

இந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நாளை பாஜக தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கு பெற நாடு முழுவதும் உள்ள பாஜக கூட்டணி கட்சி அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி டெல்லியில் நடைபெற உள்ள பாஜக ஆலோசனை கூட்டத்தில் மொத்தம் 38 கட்சிகள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும், பெரம்பலூர் தொகுதி எம்.பி-யுமான பாரிவேந்தருக்கு பாஜக ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

திமுக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பாரிவேந்தர். இவர் திமுக எம்பி-ஆக தொடர்ந்தாலும் எதிலும் திமுகவுக்கு ஆதரவாக செயல்படவில்லை. கடந்த சில மாதங்களாக பாஜகவுக்கு ஆதரவாகவே சில கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..