திமுகவுக்கு சனாதனம் வேண்டாம்… ரூ1000 திட்டம் தொடங்க அமாவாசை மட்டும் வேணுமா..? அண்ணாமலை கடும் சாடல்.!!

திண்டுக்கல்: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் ரூ. 1000, ஒரு நாள் முன்னதாகவே வழங்கப்பட்ட விவகாரத்தில் திமுகவுக்கு சனாதனமும், இந்து தர்மமும் வேண்டாம் ஆனால் அமாவாசை மட்டும் வேண்டுமா என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நேற்று (செப்டம்பர் 15) தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கு முன்னோட்டமாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கும் பணி அதற்கு முந்தைய நாளே தொடங்கப்பட்டது. இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் வியாழக்கிழமை அன்று அமாவாசை நாளிலேயே தொடங்கப்பட்டது.

ஒரே நாளில் 1 கோடி பேருக்கு மேல் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டால் தொழில்நுட்ப சிக்கல் ஏற்படலாம் எனக் கருதியே முந்தைய நாளே பணம் வரவு வைக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் எனப் பேசும் திமுக, அமாவாசை நாளில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ரூ.1000 பணம் வழங்குவதை தொடங்கி வைத்ததாக பாஜகவினர் விமர்சிக்கின்றனர்.

“என் மண், என் மக்கள்” என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார். வேடசந்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு பாதயாத்திரை மேற்கொண்டு மக்கள் மத்தியில் பேசினார் அண்ணாமலை.

அண்ணாமலை பேசுகையில், “வேடசந்தூர் பகுதியில் நாற்பதுக்கும் மேற்பட்ட நூற்பாலைகள் உள்ளன. இதில் சுமார் 40,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழக அரசின் மக்கள் விரோத போக்கினால் பெரிதும் பாதிக்கப்பட்டது சிறுகுறு நூற்பாலைகள் தான். 15 முதல் 50 சதவீத மின்சார கட்டண உயர்வை எப்படி சமாளிக்க முடியும். வேடசந்தூர் தக்காளி புகழ்பெற்றது. வடமதுரை அய்யனூர் பகுதிகளில், சுமார் 4000 ஏக்கர் தக்காளி பயிரிடப்பட்டு, தமிழகம் முழுவதும் அனுப்பப்படுகின்றன. இந்தத் தொகுதி, அழகாபுரி பகுதியில் உள்ள குடகனாறு அணையைப் பராமரிக்காததால் தண்ணீர் வீணாகிறது.

இரண்டு அமைச்சர்கள் இந்த மாவட்டத்தில் இருக்கிறார்கள். அணையைச் சரி செய்யக்கூட சமயம் இல்லாமல் இருக்கிறார்கள். குடகனாறு அணையில் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெறுகிறது. அணையைச் சரி செய்து விட்டால், மணல் கொள்ளை செய்ய முடியாது என்பதாலேயே, மக்கள் தண்ணீர் இல்லாமல் தாகத்தில் தவித்தாலும், விவசாயம் முடங்கிப் போனாலும் கவலையில்லாமல், மணல் கொள்ளை மூலம் தங்கள் கஜானா நிரம்பவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள்.

இப்போதெல்லாம் மணல் கொள்ளையை தடுக்க கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் கோட்டாட்சியர் பயப்படுகிறார்கள். அலுவலகத்திற்குள் நுழைந்து வெட்டிக் கொலை செய்கிறார்கள். இறந்தவர்கள் குடும்பத்துக்கு கனிமொழி நேரில் சந்தித்து காசோலை கொடுப்பார். போன உயிரைக் கொடுக்க முடியுமா? தூத்துக்குடி மாவட்டத்தில் லூர்து பிரான்சிஸ் என்ற கிராம நிர்வாக அலுவலரை அவரது அலுவலகம் புகுந்து வெட்டிக் கொன்றார்கள். இப்போது, கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் கோட்டாட்சியர் என அனைத்து அதிகாரிகளும், துப்பாக்கி வைத்துக்கொள்ள லைசென்ஸ் கேட்கிறார்கள். இது தான் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு லட்சணம்.

இத்தொகுதியின், திமுக பிரமுகர் வீரா சாமிநாதன் என்பவர், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும் நெருக்கமானவர். அவர் தொடர்பான இடங்களில், ஒரு மாதம் முன்பு அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. நேற்று, திண்டுக்கல்லைச் சேர்ந்த தொழிலதிபர் ரத்னம் என்பவரையும் அமலாக்கத்துறை சோதனை செய்திருக்கிறது. கரூர் கும்பலின் ஆக்டோபஸ் கரங்கள் திண்டுக்கல் வரை நீண்டிருக்கிறது. சாராய அமைச்சராக இருந்தபோது, ஆணவத்தின் உச்சத்தில் ஆடினார். ஆனால் தற்போது இலாகா இல்லாத அமைச்சர், புழல் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான். இது தான் சனாதன தர்மம். தொடர்ந்து திமுகவின் ஊழல், அமலாக்கத்துறை சோதனை என்று வரும் செய்திகளை மறைக்க, சனாதன தர்மத்தை வசைபாடி திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் எனும் சனாதன கோட்பாடு. ஒவ்வொரு ஊழல் அமைச்சர்களும் சிறைக்குச் செல்வது உறுதி.

தமிழகத்தில் இருந்த மதுவிலக்கை தளர்த்தியது மட்டுமல்லாமல், மலிவு விலை மது என பாக்கெட் சாராயம் விற்று, மக்களை குடிக்கு அடிமையாக்கி, தற்போது வருடம் 44000 கோடிக்கு மது விற்பனை நடைபெறுகிறது. மது ஊற்றி ஊற்றி கொடுத்து மனிதனை காட்டுமிராண்டி ஆக்கியது திமுக தான். சாராய ஆலைகள் நடத்தும் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், டிஆர்பி ராஜா உள்ளிட்ட திமுகவினர் சம்பாதிக்க, ஏழை எளிய மக்கள் உழைத்துச் சம்பாதிக்கும் பணம் போகிறது. தெருவுக்கு தெரு மதுக்கடைகள் திறந்து வைத்திருப்பது திமுகவினர் சம்பாதிக்க மட்டும்தான்.

முருங்கை விவசாயிகள் பயன்பெற வேண்டி, தமிழக அரசு சார்பில் வேடசந்தூரில் கட்டிக் கொடுக்கப்பட்ட குடோன் தற்போது தனியார் நூற்பாலை குடோனாக இருக்கிறது. வேடசந்தூர் பகுதியை சேர்ந்த ஒரு நூறு பேருக்காவது இந்த குடோன் மூலம் வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். விவசாயிகள் பயன்பெற்றிருப்பார்கள். ஆனால் மக்கள் வரிப்பணத்தில் விவசாயிகளுக்காக கட்டப்பட்ட கட்டிடத்தை, தனியாருக்கு வாடகை விட்டுள்ளார்கள். இதுதான் திமுகவின் உண்மை முகம். இவர்கள் ஆட்சியில், ஒட்டுமொத்த தமிழகத்தையே கொஞ்சம் கொஞ்சமாகக் கூறு போட்டு விற்று விடுவார்கள்.

ஏற்கனவே 2006 – 2011 மைனாரிட்டி அரசாக ஆட்சியில் இருந்தபோதே இவர்கள் செய்த அராஜகத்தால்தான், 2011 முதல் 2021 வரை, பத்து ஆண்டுகள் மக்களால் புறக்கணிக்கப்பட்டு இருந்தார்கள். இந்த முறை இவர்கள் செய்துகொண்டிருக்கும் அராஜகத்துக்கு, இனி எப்போது தேர்தல் வந்தாலும் திமுகவுக்கு நிரந்தரப் புறக்கணிப்புதான். வரும் பாராளுமன்ற தேர்தலில், இந்த மக்கள் விரோத ஊழல் திமுகவுக்கு பாடம் புகட்டுவோம்.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் திமுகவினரின் வருமானத்திற்காகத்தான் நடத்தப்படுகின்றன. இதனால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். திமுக இருக்கும் வரை தமிழகத்தில் டாஸ்மாக், கள்ளச்சாராயம் அழியாது. மக்களின் வருமானம் கல்விக்குதான் செல்ல வேண்டும். பா.ஜ.க.வை எதிர்ப்பதற்காகவே பிறந்த கட்சி கம்யூனிஸ்ட் கட்சி, அவர்களுக்கு வேறு எந்த கொள்கையும் கிடையாது.

திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் தொடங்கி வைக்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் அதற்கு முந்தைய நாளான 14ஆம் தேதியே பலருக்கு செல்போனில் பணம் அனுப்பியதாக மெசேஜ் வந்தது. இதுகுறித்து திமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது முழுஅமாவாசை நாளில் தொடங்கினால் திட்டம் சிறப்பாக இருக்கும் என்று கூறுகின்றனர். சனாதனத்தை எதிர்க்கும் திமுக அமாவாசை நாளில் திட்டம் தொடங்க நாள் பார்க்கலாமா? திமுகவினருக்கு சனாதனமும், இந்து தர்மமும் தேவையில்லை ஆனால், அமாவாசை மட்டும் வேண்டுமா?” என விமர்சித்துப் பேசினார்.