118 அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை வருசநாடு மலைப்பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது.

இப்புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளான தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை, வருசநாடு, தும்மக்குண்டு உள்ளிட்ட 9 ஊராட்சிகளில் 98 கிராமங்களில் வசித்து, விவசாயம் செய்து வரும் 4,601 விவசாயிகளை துணை ராணுவ படை உதவியுடன் அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர் வருசநாடு மேகமலை வனப்பகுதிகளில் உள்ள 9 ஊராட்சிகளை சேர்ந்த 98 கிராம மக்களை அங்கிருந்து வெளியேற்றக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பாக கடந்த 7ம் தேதி தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ள 98 கிராமப்பகுதிகளுக்குள் வன விவசாயிகள் குடும்பத்தை சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் 118 பேர், கிராம நிர்வாக அலுவலகம், சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இந்த 118 அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அதற்கான அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என அந்தந்த துறை அதிகாரிகளுக்கு தேனி கலெக்டர் வைத்திநாதன் உத்தரவிட்டுள்ளார். மக்களை வெளியேற்றும் விவகாரத்தில், முதல்கட்டமாக அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 118 அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் உத்தரவை ரத்து செய்யக் கோரி நாளை (ஆக.25) மாலை தேனி கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த சங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.