கோவையில் 80 பறக்கும் படைகள் கலைப்பு.!!

கோவை : நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. இவர்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட பணம் நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த பணம் கோவை மாவட்ட அரசு கருவூலத்திலும், நகைகள் மற்றும் தங்க கட்டிகள் வருமான வரி துறை அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டன. கோவை மாவட்டத்தில் 90 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தது . இதில் போலீசார், வருவாய்த் துறையினர் இடம் பெற்றிருந்தனர். வாக்கு பதிவு முடிவடைந்து விட்டதால் பறக்கும் படைகளின் எண்ணிக்கை 90 -ல் இருந்து 10 – ஆக குறைக்கப்பட்டுள்ளது. 80 பறக்கும் படைகள் கலைக்கப்பட்டுள்ளன . இதற்கான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக இதுவரை பறக்கும் படையில் இடம் பெற்று இருந்த அதிகாரிகள் தங்கள் பணிக்கு திரும்பினார்கள். 10 பறக்கும் படையினர் மட்டும் மாவட்டத்தில் உள்ள 11 சோதனை சாவடியில் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கேரளாவில் வருகிற 26 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்திலிருந்து மதுபானம் , பரிசுப் பொருட்கள் கேரளாவுக்கு கடத்திச் செல்லாமல் இருக்க இந்த பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த தகவலை கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.