டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை: 4 ஆண்டுகளில் 200% உயர்வு- மத்திய அரசு வெளியீடு..!

நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. நடுவில் இடைவெளியுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி இன்று நிறைவு பெற்றுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதியின் கடைசி நாளான இன்றைய கேள்வி நேரத்தில் பல்வேறு முக்கிய கேள்விகளை எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர். அப்படி எழுப்பப்படும் கேள்விகளுக்கு மானிய கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கும் அந்தந்த துறை சார்ந்த மத்திய அமைச்சர்கள் பதில் அளிப்பர்.

அந்த வகையில், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிஷன்ராவ் கரத், “டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க ரூபே கடன் அட்டைகள் மற்றும் குறைந்த மதிப்பு பீம் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத் தொகைத் திட்டத்தை மத்திய அரசு இந்த நிதியாண்டில் அறிமுகம் செய்துள்ளது.

இதுதவிர, அரசின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக 2018-19 ஆம் நிதியாண்டிலிருந்து 4 ஆண்டுகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் 200 சதவீதம் உயர்ந்துள்ளது.

2018-19 ஆம் நிதியாண்டில் 2,326.02 கோடி என்ற எண்ணிக்கையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றன. 2021-22 ஆம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 7,197.68 சதவீதமாக அதிகரித்துள்ளது. டிஜிட்டல் சேவைகளை தடையற்ற முறையில் வழங்க வங்கிகளும் புதிய தொழில்நுட்பங்களை உடனுக்குடன் ஏற்று செயல்படுத்துகின்றன.

பீம் யுபிஐ, யுபிஐ-123, ஆதார் பரிவர்த்தனை பாலம், ஏஇபிஎஸ் போன்ற பல முன்முயற்சிகள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம் மற்றும் வங்கிகளால் செயல்படுத்தப்படுகின்றன” என்றார்.

இந்தத் தகவலை மக்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கிஷன்ராவ் கரத் பகிர்ந்து கொண்டார்.

கடந்த சில ஆண்டுகளில்தான், டிஜிட்டல் பண பரிவர்த்தனை அசுர வளர்ச்சி அடைந்தது. குறிப்பாக, கொரோனா காலத்திற்கு பிறகு தவிர்க்க முடியாத ஒன்றாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை மாறிவிட்டது.

முன்னதாக, குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரில், பிப்ரவரி 1ம் தேதி, மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.

அதானி விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்ட வண்ணம் இருந்தனர்.

எதிர்க்கட்சியினர் விமர்சனங்களுக்கு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பிரதமர் மோடி பதில் அளித்து பேசியிருந்தார். ஆனால், எதிர்கட்சியினர் விமர்சனங்களுக்கு அவர் பதில் அளிக்காமல் காங்கிரஸ், நேரு குடும்பத்தை விமர்சித்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.