சென்னை : அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியின் கையே ஓங்கி இருக்கும் நிலையில் தற்போது அதிர்ச்சி தரும் வகையில் அவர் தரப்பில் இருந்த தென்மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகரும், முன்னாள் எம்பிமான ஒருவர் ஓ.பன்னீர்செல்வத்தை திடீரென நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது அதிமுகவில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரமடைந்து இபிஎஸ் ஓபிஎஸ் இரு அணிகளாக பிரிந்த நிலையில், கட்சியிலிருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்களை நீக்கி எடப்பாடி பழனிசாமியும், இபிஎஸ் ஆதரவாளர்களை நீக்கி ஓ.பன்னீர்செல்வமும் அறிக்கை வெளியிட்டனர்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடும் முயற்சிகளை எடுத்து வரும் ஓபிஎஸ் தரப்பு, எடப்பாடிக்கு எதிராக வலுவான அணி ஒன்றை திரட்டும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றார். ஆனால் அனைவரும் ‘முன்னாள் முன்னாள்கள்” ஆகவே இருக்கின்றனர்.
இந்நிலையில் தான் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்து இந்த இயக்கத்திற்கு உழைத்தவர்கள் உடன் இருந்து பாடுபட்டவர்கள், கட்சியை வளர்க்க ஒத்துழைப்பு கொடுத்தவர்கள், பலமாக, தூணாக இருந்து உழைத்தவர்கள் அவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை இணைத்துக்கொண்டு கட்சி செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம். பண்ருட்டி ராமச்சந்திரன், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரையும் கட்சியில் இணைக்க வேண்டும்” என்று விரும்புவதாக கூறியிருந்தார்.
அவர் இந்த கருத்தை வெளியிட்ட சில நாட்களிலேயே சசிகலா பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தொடர் தோல்வியைச் சந்தித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவைக் காப்பாற்ற முடியாது. அவரிடம் தாய்மை உள்ளம் இல்லை. அவரின் தலைமையை மக்கள் நிராகரிக்கிறார்கள். தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை வைத்து இயக்கத்தைச் சீரழிக்கக் கூடாது” என மிகக் கடுமையாக விமர்சித்தார்.
இந்தநிலையில் அதிமுகவின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் நியமிக்கப்படுகிறார். கட்சி நிர்வாகிகள் அனைவரும் அரசியல் ஆலோசகருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கை வெளியான சில நிமிடங்களில் அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், கட்சியின் அமைப்பு செயலாளரான பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என அதிரடி காட்டினார்.
கிளைச் செயலாளர் ஆவதற்கு கூட தகுதி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி பண்ருட்டி ராமச்சந்திரனை விமர்சித்த நிலையில் உடனடியாக அவரை கட்சியிலிருந்து நீக்கியது எதற்காக என ஓபிஎஸ் தரப்பு கேள்வி எழுப்பியது. இந்த நிலையில் தான் தினமும் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வந்தார். அதில் ஜெயலலிதா காலத்தில் இருந்து அதிமுகவில் பயணிக்கும் மூத்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பண்ருட்டி ராமச்சந்திரனை பயன்படுத்திக் கொண்டது ஓபிஎஸ் தரப்பு. அதற்கான பலரும் தற்போது கிடைத்திருக்கிறது.
இந்த நிலையில் தான் அதிமுகவின் தென் மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க நபரும் முன்னாள் எம்பியுமான முத்து கருப்பன் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சந்தித்து பேசி இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று வரை எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவராக இருந்த முத்துக்கருப்பன் தற்போது திடீர் என ஓ பன்னீர்செல்வம் தரப்பை சந்தித்து பேசி இருப்பது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அதிகாரமும் நிர்வாகிகள் ஆதரவும் தங்கள் பக்கம் இருக்கும் நிலையில் எந்த அடிப்படையில் முத்துக்கருப்பன் செல்வம் தரப்புக்கு தாவினார் என விசாரித்து வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மேலும் தென் மாவட்டங்களில் வேறு யாரேனும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு செல்கிறார்களா எனவும் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.