கோவை ரயில் நிலையம் முன் தந்தை பெரியார் திராவிடர் கழகம், ம.தி.மு.க, காங்கிரஸ், எஸ்.டி.பி.ஐ. திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு வணிகர் பேரவை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மே 17 இயக்கம் உள்பட 33 அமைப்புகள் ஒன்று சேர்ந்து நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு மறியல் போராட்டம் நடத்த உள்ளனர்.
இதற்கு த.பெ.தி.க பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். இதில், திரளான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதுகுறித்து த.பெ.தி.க பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறியதாவது:-
காசில்லாமல் பயணிக்க, காசிக்கு மத்திய அரசு ரயில் விடுகிறது. ஆனால், காசு கொடுத்து பயணிக்க ராமேஸ்வரம், திருச்செந்தூர், தென்காசி, மதுரை, பழனி உள்ளிட்ட நகரங்களுக்கு ரயில் விட மத்திய அரசு மறுக்கிறது. தொழில் நகரமான கோவையில் வெளி மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமானோா் வசித்து வருகின்றனா். குறிப்பாக தென் மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் இங்கு அதிகம் வசிக்கின்றனா்.
இவா்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்ல அரசுப் பஸ்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. பொள்ளாச்சி ரயில் பாதை சீரமைப்புப் பணிகள் முடிவடைந்து ரயில்கள் இயக்கம் தொடங்கியுள்ளது. இந்த நிலையிலும், கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்படவில்லை.கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக தென்மாவட்டங்களுக்கு ரயில் விட்டால், பல லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள்.
கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் வர்த்தகம் பெருகும். ரயில்வே துறைக்கும் நல்ல வருவாய் கிடைக்கும். இந்த கோரிக்கையை முன்வைத்து, இந்த ரயில் மறியல் போராட்டம் நடக்கிறது. இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவ்வாறு கு.ராமகிருஷ்ணன் கூறினார்.
Leave a Reply