பிரசாந்த் கிஷோருடன் 3 கட்ட பேச்சு வார்த்தை-குழப்பத்தில் சோனியா.!!

தேர்தல் வியூகம் வகுத்தனர் பிரசாந்த் கிஷோர் கடந்த 16, 18 தேதிகளில் காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

நேற்று அவர் மூன்றாவது முறையாக ஆலோசனை நடத்தியிருக்கிறார். முதல் சந்திப்பின் போது மட்டும் ராகுல்காந்தி இருந்திருக்கிறார். அடுத்த இரண்டு சந்திப்புகளிலும் ராகுல் இல்லை. அவர் சொந்த விஷயம் காரணமாக வெளிநாடு சென்று விட்டதாக கூறப்படுகிறது . அடுத்த இரண்டு சந்திப்புகளில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி இருந்திருக்கிறார் .

காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டு கட்சியில் இருந்து பலரும் வெளியேறி வந்து வரும் நிலையில், காங்கிரசுக்கு என்னால் புத்தகங்கள் புத்துயிர் அளிக்க முடியும். மீண்டும் ஆட்சியில் அமரச் செய்ய முடியும் . அதற்கான திட்டங்கள் என்னிடம் இருக்கிறது என்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருந்தார். தனக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கினால் காங்கிரசுக்கு வேலை செய்ய தயார் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதற்கு காங்கிரஸில் உள்ள மூத்த தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் பிரசாந்த் கிஷோரை அழைத்து காங்கிரஸ் தலைமை பேச்சுவார்த்தை நடத்தவில்லை .

ஆனால் உத்தரப் பிரதேசம் , உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்த பின்னர் வரப்போகும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு தனது கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று நினைத்திருக்கிறார் சோனியாகாந்தி. இதை அடுத்து தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை டெல்லி ஜன்பத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேசினார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி. இந்த சந்திப்பில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே , காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் , காங்கிரஸின் மூத்த தலைவர்கள் அஜய் மக்கான், திக்விஜய்சிங், ஜெய்ராம் ரமேஷ், அம்பிகா சோனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

4 மணி நேரம் நடந்த இந்த முதல் சந்திப்பின் ஆலோசனை கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர், நாடாளுமன்றத் தேர்தலில் வலுவாக இருக்கக்கூடிய பாஜகவை வீழ்த்துவதற்கு காங்கிரசும் அதனுடைய கூட்டணி கட்சிகளும் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று விரிவாகப் பேசியிருக்கிறார்.

கடந்த 16ம் தேதிக்கு பின்ன 18 மற்றும் 19 தேதிகளிலும் பிரசாந்த் கிஷோர், சோனியா மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

கட்சியின் சில தலைவர்கள் பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்த்து அவருடன் சேர்ந்து பணியாற்றலாம் என விரும்புகிறார்கள். ஆனால் பலரோ
பிரசாந்த் கிஷோரை கட்சிக்குள் கொண்டுவந்துவிட்டால் தங்களுக்கான செல்வாக்கு போய்விடும் என்று நினைத்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்களாம். ஆனால், கட்சியில் தனக்கு உரிய முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துவதில் தான் தீர்மானமாக இருந்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.

இதனால் காங்கிரஸ் தலைமை குழப்பத்தில் இருக்கிறது. கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றால் தொண்டர்கள் இடையே ஏற்பட்டிருக்கும் அதிருப்தி நீங்க வேண்டும் என்றால் அது பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் சேர்ப்பதால் மட்டுமே முடியும். அவரை சேர்த்துவிட்டால் கட்சி தொண்டர்களுக்கு ஒரு புது நம்பிக்கை பிறக்கும் என்று நினைக்கிறாராம் சோனியா. ஆனாலும் சீனியர்கள் பலரும் எதிர்ப்பதால் குழப்பம் நீடிக்கிறது.