சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பருத்தி ஏலம் தொடக்கம்… 1426 மூட்டை பருத்தி ரூ.29.69 இலட்சத்திற்கு விற்பனை.!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வேளாண்மை விற்பனையாளர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இந்த ஆண்டு பருத்தி ஏலம் நேற்று தொடங்கியது. சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரியப்பம்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம், டிஜி புதூர், கடத்தூர், கோரமடை, பெரியூர், உக்கரம், காராப்பாடி, சிங்கிரிபாளையம், உடையாக்கவுண்டன்பாளையம், பவானிசாகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் விளைவிக்கும் பருத்தியை சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நடைபெறும் பருத்தி ஏலத்திற்கு கொண்டு வருவது வழக்கம். அதன்படி இந்த சீசன் பருத்தி நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஏலத்தை சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் வி.சி. வரதராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சங்கத்தின் மேலாண்மை இயக்குனர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். ஏலத்தில் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்துள்ள 1426 மூட்டை ஆர்.சி.ஹெச். ரக பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் கோவை, பெரியநாயக்கன்பாளையம், அன்னூர், சோமனூர், அவிநாசி, புஞ்சைபுளியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியின் தரத்திற்கு ஏற்ப மறைமுக முறையில் ஏலம் எடுத்தனர். ஏலத்தில் ஒரு குவிண்டால் பருத்தி குறைந்தபட்சம் ரூ.5560 க்கும், அதிகபட்சம் ரூ.6600 க்கும் ஏலம் போனது. 1426 மூட்டை பருத்தி  29 லட்சத்து 68 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனையானது. விவசாயிகளுக்கு  பருத்தி விற்பனை தொகையை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதாகவும், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும் என கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.