3 வாரங்களில் 7 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லும் அமித்ஷா-மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்.!!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த 3 வாரங்களில் 7 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்குவங்க மாநிலத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் கலந்து கொள்வதற்காக 2 நாள் பயணமாக அம்மாநிலம் சென்றுள்ளார்.

இந்நிலையில் மேற்குவங்க சுற்றுப்பயணத்திற்கு பிறகு அசாம், தெலங்கானா, கேரளம், உத்தரகண்ட், அருணாச்சலப் பிரதேசம், மகாராஷ்ட்டிரம் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு செல்ல உள்ளார்.

மே 9 மற்றும் 10ஆம் தேதி அசாம் செல்லும் அமித்ஷா அதனைத் தொடர்ந்து மே 14ஆம் தேதி தெலங்கானா மாநிலம் ரங்கரெட்டி மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். தொடர்ந்து மே 15ஆம் தேதி கேரளமும், மே 20ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலமும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் மே 27ஆம் தேதி மகாராஷ்டிரம் செல்லும் அமித்ஷா மே 28, 29ஆம் தேதிகளில் குஜராத் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.