பணியின்போது காவலர்கள் செல்போன் பயன்படுத்த கூடாது – சென்னை காவல் ஆணையர் அதிரடி உத்தரவு..!

சென்னை: பணியில் இருக்கும்போது போலீஸார் கண்டிப்பாக செல்போன் பயன்படுத்தக் கூடாது என சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாநகர போலீஸார் அனைவருக்கும் அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பாதுகாப்பு மற்றும் சாலைகளில் போக்குவரத்து பணியில் இருக்கும் காவலர்கள் பணி நேரத்தில் செல்போனை பயன்படுத்துவதால், அவர்களால் பணியை சரியாக செய்ய முடியாதபடி கவனச் சிதறல் ஏற்படுகிறது.

எனவே, சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு,முக்கியப் பிரமுகர்கள் மற்றும் திருவிழாக்களில் பாதுகாப்பு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் ஆகிய பணி நேரங்களில் போலீஸார் யாரும்கண்டிப்பாக செல்போனை பயன்படுத்தக் கூடாது.

மிக மிக முக்கிய நபர்களின் பாதுகாப்பு, முக்கியப் போராட்டங்களின்போது, காவல் உதவி ஆய்வாளர்களுக்கு கீழ் உள்ள போலீஸார் செல்போனை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. இந்த அறிவுறுத்தல்களை எந்தவித சுணக்கமும் இன்றி மிக கண்டிப்புடன் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதை அனைத்து காவல் நிலைய தகவல் பலகைகளில் ஒட்டியும், தினமும்காலை அணிவகுப்பின்போது படித்துக் காட்டியும், இந்த அறிவுரையை கண்டிப்பாக பின்பற்ற வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

சென்னை மாநகர புதிய காவல்ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர்கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, சென்னையின் சட்டம்-ஒழுங்கு நிலைகுறித்து காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நேற்று காலை, காவல்ஆணையர் அலுவலகத்தின் 8 மாடிகளிலும் உள்ள ஊழியர்களை சந்தித்துபேசினார். தரை தளத்தில் உள்ள கேன்டீனுக்கு சென்று, சாப்பாடு தரமாக உள்ளதா என்று ஆய்வு செய்தார்.

பின்னர் பொதுமக்கள் குறை கேட்கும் அறைக்கு சென்று, அங்கு காத்திருந்த மக்களிடம் மனுக்களை வாங்கினார். அவர்களது குறைகளையும் கேட்டறிந்தார். ஆய்வின்போது, கூடுதல் காவல் ஆணையர் லோகநாதன் (தலைமையிடம்), இணை ஆணையர் சாமுண்டீஸ்வரி, துணை ஆணையர்கள் அரவிந்தன், ராமமூர்த்தி, உதவி ஆணையர் விஜயராமுலு உடனிருந்தனர்.