தொடர் மழை: ஆழியார்,சோலையார் அணைகளின் நீர்மட்டம் உயர்வு- மகிழ்ச்சியில் விவசாயிகள்..!

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை அடிக்கடி பெய்துள்ளது.

இதனால் பி.ஏ.பி திட்டத்திற்குட்பட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகமாகி முழு அடியை எட்டியது. இதேபோன்று வடகிழக்கு பருவமழை தொடக்கத்தில் இருந்தும், பி.ஏ.பி திட்ட அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகமாகி முழு அடியை எட்டியது.
பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணை மொத்தம் 120 அடியை கொண்டதாகும் இந்த அணை தென்மேற்கு பருவமழையால், ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி முழு அடியையும் எட்டியது. அதன் பின்னர் கடந்த மாதம் இறுதி முதல் வடகிழக்கு பருவமழையால், ஆழியார் அணைக்கு ஓரளவு தண்ணீர் வரத்து இருந்ததுடன், நீர்மட்டமும் குறையாமல் தொடர்ந்து 3 மாதமாக முழு அடியையும் எட்டிக் கொண்டிருக்கிறது.தற்போது ஆழியார் அணைக்கு வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதே அளவு தண்ணீர், பாசனத்துக்கும், குடிநீர் தேவைக்கும் வெளியேற்றப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி 119.30 அடியாக, தண்ணீர் உள்ளது.

வால்பாறையை அடுத்த பி.ஏ.பி திட்டத்திற்குட்பட்ட மொத்தம் 160 அடி கொண்ட சோலையார் அணையின் நீர்மட்டம், கடந்த ஜூலை மாதத்தில் முழு அடியை எட்டியது. அதே நிலை தற்போதும் நீடித்து வருகிறது. தொடர்ந்து 4 மாதமாக சோலையார் அணையில் முழு அடி தண்ணீர் உள்ளது. நேற்றைய நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 345 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
வினாடிக்கு 350 கன அடி தண்ணீர் வரத்தும், 250 கன அடி தண்ணீர் வெளியேறப்படுகிறது. பி.ஏ.பி திட்டத்திற்குட்பட்ட சோலையார், ஆழியார் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து பல மாதமாக முழு அடியையும் எட்டியவாறு இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.