வங்கிகளில் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும் மற்றும் ஊழியர்களுக்கு இடையேயான ஊக்கத்தொகை (PLI) பாகுபாட்டை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய போராட்டக் களத்தில் இறங்க வங்கி ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
ஒன்பது முக்கிய வங்கி சங்கங்களின் (AIBEA, AIBOC, NCBE) கூட்டமைப்பான ‘யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ்’ (UFBU) இந்த வேலைநிறுத்தப் போராட்ட அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக செப்டம்பர் 11, 2026 அன்று நாடு முழுவதும் ஒருநாள் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. அதன் பின்னர் செப்டம்பர் 12, 13 ஆகியவை சனி, ஞாயிறு என்பதால், தொடர்ந்து வங்கி கிளைகளின் வழக்கமான சேவைகளில் பாதிப்பு ஏற்படலாம். இதையடுத்து, செப்டம்பர் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களும் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 26, 27 சனி, ஞாயிறு என்பதால், அந்த காலகட்டத்தில் தொடர்ந்து ஐந்து நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்படக்கூடிய நிலை ஏற்படுகிறது. ஆனால், இந்தப் போராட்டத்தின் மிகப்பெரிய கட்டம் அக்டோபர் மாதத்தில் வர உள்ளது. தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால், அக்டோபர் 26, 2026 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று வங்கி தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன..









